அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் செய்யப் போவது என்ன?

 

 அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் றிஷாதும் ஒரு உடன்பாட்டுக்கு வருவார்களாக இருந்தால் நகரசபையை வார்த்தமானிப்படுத்த, தான் தயார் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார். சாய்ந்தமருது நகரசபை விடயம் முற்று முழுதாக அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராகவே உள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபாவின் இக் கூற்று அமைச்சர் றிஷாதையும் சற்று பாதித்திருந்தது. அமைச்சர் றிஷாதும் சாய்ந்தமருது நகரசபையின் எதிரியா என்ற சாய்ந்தமருது மக்களின் வினா அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கூற்று மூலம் எழுந்தமையே அமைச்சர் றிஷாதுக்குள்ள பாதிப்பாகும்.

இருவரும் கோரினால் என்பதன் பொருள் ஒருவர் தடையாக இருந்தாலும் தர மாட்டேன் என்பதாகும். இதில் சாய்ந்தமருது நகர சபையை தொடர்பில் கலந்துரையாட அமைச்சர் றிஷாத், அமைச்சர் ஹக்கீமை அழைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் றிஷாத் சாய்ந்தமருது மக்களின் துரோகியல்ல என்ற விடயத்தை நிரூபணம் செய்துள்ளார். இவ் அழைப்பை அமைச்சர் ஹக்கீம் ஏற்காது போனால் அதற்கு அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்த முடியாது. அவருக்கு தொடர்ச்சியாக வாக்களித்து மு.காவின் தலைமைப்பதவியையும் வழங்கிய சாய்ந்தமருது மக்களே குற்றவாளியாவர். அமைச்சர் றிஷாத், அமைச்சர் ஹக்கீமை நோக்கி பந்தை வீசி மிக லாவகமாக தப்பித்துக்கொண்டுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உண்மையான பற்றுக்கொண்டவராக இருப்பின் அமைச்சர் றிஷாதின் அழைப்பை ஏற்க வேண்டும். இதற்கு சாய்ந்தமருது மக்களே அமைச்சர் ஹக்கீமை அழைத்துச் செல்ல வேண்டும். அமைச்சர் ஹக்கீமின் பின்னால் அலைந்து கலந்துரையாடலை அமைக்க வேண்டிய எந்த தேவையும் அமைச்சர் றிஷாதுக்கில்லை. இதற்கு இன்றுவரை சாய்ந்தமருது மக்கள் செய்துள்ள முயற்சிகள் என்ன என்று கேட்டால் எதுவுமில்லை எனலாம். இதன் பிறகும் இவர்கள் அமைச்சர் றிஷாதை குற்றம் சுமத்துவதில் எந்தவித நியாயமுமில்லை.

இப்போது அமைச்சர் றிஷாத் ஹக்கீமை நோக்கி பந்தை மாற்றியுள்ளார். அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாதின் பந்தை பிடித்தால் விடயம் ஓரளவு சரிவரலாம். இருவரும் கலந்துரையாடி ஒரு சுமுக முடிவை எட்டாது போனால் இவ்விடயத்தில் யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது. அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாதுடன் கலந்துரையாடலுக்கு செல்லாது போனால் பிழை அமைச்சர் ஹக்கீமிடமே உள்ளது. அமைச்சர் றிஷாதால் எதுவும் செய்ய முடியாது. சாய்ந்தமருது மக்களும் அவரை பிழை காண முடியாது. கல்முனை மக்களும் பிழை காண முடியாது. அமைச்சர் ஹக்கீம் ஒரு போதும் அமைச்சர் றிஷாத்துடன் பேச்சுக்கு செல்லப் போவதில்லை. தேர்தல் வந்தால் கோடிகளுடனும் ஆதவன் பாட்டுடனும் சென்று ஏமாற்றி விடலாம் என்ற கணக்குடன் இருப்பார். இப்படியான அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் செய்யப் போவது என்ன?

இங்கு தான் மிக முக்கிய ஒரு செய்தி உள்ளது. அமைச்சர் றிஷாத் வன்னியை தளமாக கொண்டு அரசியல் செய்பவர். மு.காவின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில், அதிலும் மு.காவின் அதி உச்ச ஆதரவு கொண்ட சாய்ந்தமருதில் ஒரு விடயம் நடக்க, அமைச்சர் றிஷாதின் சம்மதம் தேவை என்றால் அவரின் அரசியல் வேரூண்றுகை இலங்கை முஸ்லிம்களிடத்தில் எந்தளவு ஆழமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இவ்விடயத்தில் அமைச்சர் றிஷாதும் அமைச்சர் ஹக்கீமும் சமமாக உட்கார்ந்து பேசும் நிலைமையை சமூகமே ஏற்படுத்தி கொடுத்துள்ளது. யார் ஏற்றாலும் சரி, ஏற்காது போனாலும் இவ்விடயத்தின் மூலம் அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களின் தலைமை நோக்கி பயணத்தில் வெற்றி கண்டுள்ளார் எனலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.