தரம் குறைந்த எரிபொருள் கப்பலை கொள்வனவு செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,தரம் குறைந்த எரிபொருட்கள் அடங்கிய கப்பலை நான் நிராகரித்திருந்தேன். இந்த கப்பலை மீளவும் பெற்றுக் கொள்ளுமாறு அரசியல் ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
பிரச்சினைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 9ம் திகதி வரையில் எரிபொருட்களை விநியோகம் செய்ய இயலுமை உண்டு. எனினும் சில சூழ்ச்சிகாரர்கள் பிழையான தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்பியுள்ளனர்.இதனால் பீதியடைந்த மக்கள் அதிகளவு எரிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்து கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே நாட்டில் செயற்கை ரீதியாக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தரம் குறைந்த காரணத்தினால் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் கப்பலை நிராகரித்தேன். இவ்வாறான நிலையில் குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த 18 நாட்களாக அங்கு நங்கூரமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கப்பலின் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.