அக்கரைப்பற்றும் அதாஉல்லாவும் பிரிக்க முடியாத கோடுகள்

அக்கரைப்பற்றும் அதாஉல்லாவும் பிரிக்க முடியாத கோடுகள். முழு கிழக்கிலும் அதாஉல்லாவின் அரசியல் வீறு கொண்டெழுவது வரலாற்று நிகழ்வு. எதிர்வரப் போகும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸின் வெற்றி மிக அவசியமானது. தேர்தல்களை போராட்டங்களாக பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்து, இந்தப் போராட்டத்தினையும் சந்தித்து விட தேசிய காங்கிரஸ் தயாராகி விட்டது. அதாஉல்லா இல்லாத இடைவெளியினை அக்கரைப்பற்று மக்கள் நன்கு புரிந்துள்ளனர். ஏஜென்டுகளை விரட்டியடிக்க தயாராகியும் விட்டனர். பள்ளி உடைப்புக்களையும், மஹிந்த புராணத்தையும் விஸ்திரப்படுத்தி, மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, முஸ்லிம்களை நரக பாதாளத்தில் தள்ளி விட்ட அரசியல் தலைமைகளை, மக்கள் அடையாளம் கண்டும் விட்டனர். சில இடங்களில் அவர்கள் உருவ பொம்மைகளாக்கப்பட்டு எரிக்கப்பட்டும் விட்டனர்.

அக்கரைப்பற்றை பொறுத்தவரை, மிக அமைதியான மக்கள் நிலைப்பாட்டினை தரிசிக்க முடியும். பாலமுனை பிரகடனம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமும், அதாஉல்லா எனும் தனிமனிதனின் குரலின் பின்னால் திரண்ட மக்கள் வெள்ளமும், இதற்கு தக்க சான்று. அக்கரைப்பற்றினை நுட்பமாக செதுக்கிய அதாஉல்லாவை மக்கள் மறந்து விடவில்லை. அதிகாரம் இருந்தால் அரவணைப்பதும், அதிகாரமற்றுப் போனால் விரட்டி விடுவதும் அக்கரை மண்ணின் பண்பல்ல. நன்றி மறந்தவர்களாகவோ, முகம் திருப்புபவர்களாகவோ அக்கரைப்பற்று மக்கள் ஒரு போதும் இருந்ததில்லை.

தேசிய காங்கிரஸினைத் தவிர வேறு எந்தக் கட்சிகளும், அக்கரைப்பற்று மண்ணில் ஒரு புல்லினைக் கூட நட்டியிருக்கவில்லை. அக்கரைப்பற்று மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியிருக்கவில்லை. அம் மக்கள் தாகித்திருந்த போது ஒரு சொட்டு நீர் பருக்கவில்லை. புறமொதுக்கப்பட்ட நகரமாகவே அக்கரைப்பற்று நோக்கப்பட்டது. “எனது தாய்க்கு புடவை வாங்கி கொடுக்க, எனக்கு யாருமே சொல்லித்தர தேவையில்லை” எனும் அதாஉல்லாவின் வார்த்தைகள் இன்னும் ஈரம் காயாமல் இருக்கின்றன. அரசியல் விளையாட்டுக்காக அக்கரைப்பற்றினை பகடைக் காயாக மாற்ற சில பசுத் தோல் புலிகள் வரக் கூடும். அவர்களுக்கான தக்க பதிலை அக்கரைபபற்று மக்கள் வழங்குவர். அதுவரைக்கும் காத்திருப்போம்.

சாஜித் அஹம்மத்