இஸ்ரேலில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால்வாய் கண்டுபிடிப்பு !

201505260127481436_2000yearold-watersupply-system-unearthed-in-Israel_SECVPF

இஸ்ரேலின் ஜெருசெலம் நகரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் ஒன்று இஸ்ரேலின் ஹார் ஹோமாவிற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் குழாய் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த அரிய பழங்கால கால்வாய் சுவடுகள் தென்பட்டுள்ளது.

அதையடுத்து, அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட ஆய்வில் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாயின. அதில், ஜெருசலம் நகரத்திற்கு தண்ணீரை வழங்குவதற்காக ஹாஸ்மோனியன் மன்னர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த தாழ்வான கால்வாயை கட்டியிருந்தது தெரிய வந்தது.

மேலும், இந்த கால்வாய் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பெத்லஹேம் நகரின் தெற்கில் 21 கிலோ மீட்டர் தொலைவில் சாலமோன் குளத்திற்கு அருகே ஆரம்பமாகிறது இந்த கால்வாய்.

முதலில், திறந்தவெளி கால்வாய் வழியாக தண்ணீர் வழிந்தோடியிருக்கிறது, இது 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகும். அந்த காலகட்டத்தில் ஓட்டோமேன் ஆட்சிக்காலம் நடந்து கொண்டிருந்தது. தண்ணீரை பாதுகாக்க அப்போது டெரா கோட்டா பைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், அதற்கு பிறகு நவீன காலத்தில் ஜெருசெலம் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்ட போது உம் துபா, சுர் பகார், கிழக்கு தால்பியாட் மற்றும் அபு தோர் பகுதிகளுக்கும் தண்ணீர் பாய்ந்தது.

அதுமுதல், ஜெருசலம் நகரத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக இந்த கால்வாய் இருந்தது. அதற்கு பிறகு வந்த ஆட்சியாளர்களும் சுமார் 2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்திருக்கின்றனர். ஆனால், நவீன மின்சாரம் முறையில் தண்ணீர் விநியோகிக்கும் முறை வந்த பிறகு இந்த கால்வாய் அழிந்து விட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாய் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய அகழ்வாராய்ச்சியினர் முடிவு செய்துள்ளனர்.