தொகுதி நிர்ணயம்
கலப்பு தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதினால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் பேசுபொருளாக வந்துள்ள தேர்தல் தொகுதி நிர்ணயம் சம்மந்தமாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய தேவையும் கடப்பாடும் அரசியல் தலைவர்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
கடந்த கால வரலாற்றில் நம் தலைவர்கள் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகளை செய்துவிட்டார்கள். குறிப்பாக அரசியல் யாப்பு, தேர்தல் சட்டம், காணி போன்ற முக்கிய விடயங்கள் உட்பட இறுதியாக அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் அமைப்பு இடைக்கால அறிக்கையில் முஸ்லிம் தலைவர்களின் அசமத்தன போக்கினை அறிய முடிகின்றது. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் வெறுமனே மக்கள் மத்தியில் வந்து தம் தவறுகளை பற்றி சொல்லியழுவதில் எப்பயனும் இல்லை. இவ்வாறான ஒரு பின்னணியில் முக்கியமான ஒரு காலகட்டத்தில் தேர்தல் தொகுதி சம்மந்தமான ஒரு வரலாற்று பார்வையை சற்று திருப்பி பார்ப்பது சாலச்சிறந்தது.
இலங்கையின் முதலாவது தேர்தல் தொகுதி நிர்ணயிக்கப்பட்டது 1946 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு 76(2) பிரிவுக்கு அமைவாக ஆகும். இதன்படி 89 தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இதில் 25 தொகுதிகள் 1000 சதுர மைல் பரப்பையும் 64 தொகுதிகள் 75000 மக்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையிலும் அப்போதைய சனத்தொகை 6.4 மில்லியன் மதிப்பீட்டின் படி உருவாக்கப்பட்டது. மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆகவும் இதில் 6 நியமன உறுப்பினர்கள் தவிர மிகுதி 95 உறுப்பினர்களும் தொகுதிரீதியாக தெரிவு செய்யப்பட்டனர். பல்-உறுப்பினர் தெரிவு தொகுதியாக கொழும்பு மத்தியில் இருந்து 3 பேரும் கடுகண்ணாவை, அம்பலாங்கொட, பலபிட்டிய மற்றும் பலாங்கொடை தொகுதிகளில் இருந்து தல 2 உறுப்பினர்களுமாக தெரிவு செய்யப்பட்டனர்.
இரண்டாவது எல்லை நிர்ணயத்துக்காக 1959 ஆம் ஆண்டைய அரசியல் யாப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. முதலாவது எல்லை நிர்ணய கொள்கையில் சற்று மாற்றமாக ஏனையவர்களின் சலுகைகள் கருத்தில் எடுக்காமல் இன குழுக்களின் அடிப்படையில் பல பிரதிநிதித்துவ எல்லைகள் பிரிக்கப்பட்டது. அப்போதைய சனத்தொகை 8.2 மில்லியன் மதிப்பீட்டின் படி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்து தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையும் 145 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனடிப்படையில் 6 நியமன உறுப்பினர்கள் தவிர மிகுதி 151 உறுப்பினர்களும் தொகுதிரீதியாக தெரிவு செய்யப்பட்டனர். பல்-உறுப்பினர் தெரிவு தொகுதியாக கொழும்பு மத்தியில் இருந்து 3 பேரும் கொழும்பு தெற்கு, அக்மீமன, மூதூர், மற்றும் மட்டக்களப்பு தொகுதிகளில் இருந்து தல 2 உறுப்பினர்களுமாக தெரிவு செய்யப்பட்டனர்.
மூன்றாவது எல்லை நிர்ணயம் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1971 ஆம் ஆண்டைய 12.7 மில்லியன் சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் 160 தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இத்தொகுதிகளில் 143 தொகுதிகள் 90000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையிலும் 25 தொகுதிகள் 1000 சதுரமைல் பரப்புக்கு ஒரு தொகுதி என்ற ரீதியிலும் வகுக்கப்பட்டது. இத்தேர்தல் தொகுதிகளில் இருந்து 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இக்காலப்பகுதியில் சுமார் 10 இலட்சம் மக்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இனரீதியான எல்லை நிர்ணயம் கடைபிடிக்கப்பட்ட போதிலும் மஹநுவர(கண்டி), தெல்தெனிய, வியலுவ மற்றும் கொழும்பு மேற்கு பிரதேசங்களில் சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றே சொல்லவேண்டும்.
இவ்வாறு இனரீதியாக எல்லைகள் பிரிக்கப்படும் போது கிழக்கில் பிரதேசரீதியாக பல பாதிப்புகள் ஏற்பட்டன. நிந்தவூர் தொகுதி இல்லாமலாக்கப்பட்டு பொத்துவில் தொகுதி உருவாக்கப்பட்டபோது அதிக சனத்தொகை கொண்ட ஊரான அக்கரைப்பற்று இரண்டாக பிரிக்கப்பட்டு பொத்துவில் தொகுதியிலும் சம்மாந்துறை தொகுதியிலும் சேர்க்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டைய எல்லை நிர்ணயமானது ஜனாதிபதி ஜெ ஆர் ஜெயவர்த்தனவின் அறுதி பெரும்பான்மை அரசினால் முன்வைக்கப்பட்ட வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு கண்துடைப்பாகும். 1976 ஆம் ஆண்டைய தொகுதிகள் அவ்வாறே இருக்கத்தக்க 9 மாகாணங்களுக்கும் 4 உறுப்பினர்கள் என்ற ரீதியில் அதிகரிக்கப்பட்டு மேலும் 29 தேசியப்பட்டியல் ஆசனங்களை உள்வாங்கி உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்டது. சனத்தொகை மதிப்பீடோ அல்லது நிலப்பரம்பலோ கருத்தில் எடுக்காமல் அரசின் அதி உச்ச அதிகாரம் இதன் போது பயன்படுத்தப்பட்டது. உறுப்பினர்களின் தெரிவு விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் நடைபெற்றதனால் தொகுதி ரீதியான பிரதிநிதித்துவம் இங்கு முக்கியம் பெறவில்லை. இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் அதிகூடிய மக்கள் பிரதிநிதிகளை முஸ்லிம் கட்சிகளின் ஊடாகவும் பெரும் தேசிய கட்சிகளின் ஊடாகவும் பெற்றுக்கொண்டது இத்தேர்தல் முறை மூலமாகும். அத்துடன் ஏனைய சிறுபான்மை தமிழர்களும் புதிதாக வாக்குரிமை பெற்ற இந்திய வம்சாவளி மக்களும் அதிகூடிய மக்கள் பிரதிநிதிகளை பெற்றதும் இத்தேர்தல் முறை மூலமாகும்.
இந்நிலையிலேயே, மிக அண்மையில் – கலப்பு தேர்தல் முறைமையை உள்வாங்கிய புதிய மாகாண சபை சட்டம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டு 2/3 பெரும்பாண்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் புதிய உள்ளுராட்சி சபை சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டமை புதிய எல்லை நிர்ணய தேவைப்பாட்டை மேலும் வலியுறுத்தி நிற்கின்றது. நிச்சயம் விகிதாசார தேர்தல் முறைமையில் இருந்த சாதகத்தன்மை கலப்பு முறைமையில் குறைவாகவே இருக்கும்.
எனவே கடந்த கால வரலாற்று தவறில் இருந்து படிப்பினையைப் பெற்று எதிர்காலத்தில் வரவிருக்கும் எல்லை நிர்ணய சபைக்கு காத்திரமான தீர்வினை முஸ்லிம் சமூகம் முன்வைக்க தயாராக வேண்டும். மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சியின் போதும் சிறுபான்மை சமூகத்திற்க்கு பாதகமான விடயங்களில் எல்லாம் அப்போதைய ஒவ்வா சூழ்நிலை காரணமாக எம்மவர்கள் ஆதரவு அளித்துவிட்டு நல்லாட்சியிலும் சமூகம் சார்ந்த விடயங்களில் கண்ணைக்கட்டி கை உயர்த்தும் கலாச்சாரமே தொடர்கின்றது. எனவே இவ்விடயத்தில் தற்போதைய மக்கள் பிரதிநிதிகளை நம்புவதில் எப்பயனும் இல்லை. சிவில் சமூகத்தை சார்ந்த துறை சார் நிபுணர்கள் சமூக அக்கறையுடன் முன்வந்து இந்நடவடிக்கையை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.
மாகாண சபை தேர்தல் முறை 50:50 என்ற கலப்பு முறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளபடியால் பாராளுமன்ற தேர்தல் முறையும் இவ்வடிப்படையிலேயே நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரிக்கப்படுமேயானால் 2012 ஆம் ஆண்டைய குடிசன மதிப்பீட்டின் படி 220 சிங்களவரும், 33 தமிழரும், 28 முஸ்லிம்களும், 13 இந்திய வம்சாவழியினரும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவது இக்கலப்பு முறை தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் புதிய அரசியல் யாப்பு நகல் முறைப்படி ஒருவேளை பாராளுமன்ற கீழ்சபை கலப்பு முறையில் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் பாராளுமன்ற மேல்சபைக்கான தெரிவு எவ்வாறு அமையும் என்பதில் ஒரு தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. உலகின் பல்வேறு பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருசபை உள்ளடக்கிய பாராளுமன்ற ஜனநாயகம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்ற படியினால் அவற்றின் நகல்களை பின்பற்றுவது ஏற்புடையது.
எவ்வாறான போதிலும் அண்மைக்கால அரசியல் நகர்வுகளின் போக்கை நோக்கும்போது, மீண்டும் ஒரு முறையான எல்லை நிர்ணயம் நடைபெறாமல் 1981 ஆம் ஆண்டில் ஐ. தே. க. அரசு பின்பற்றிய முறையினை கையாளலாம் என்பதை ஊகிக்க முடிகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்மையில் வெளியிடப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் பிரிப்பும் உறுப்பினர்களின் எண்ணிக்கையுமாகும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சில பிரதேச செயலகங்களின் எல்லைகள் இன்னும் நிர்ணயிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அதற்கான உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. சனத்தொகை மதிப்பீடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் சில பிரதேசங்களில் பாரிய முரண்பாடு காணப்படுகின்றது. இவ்வாறான தவறுகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன் எதிர்கால மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொகுதிகள் நிர்ணயத்தில் சமூகத்துக்கான விழிப்பூட்டல் சம்மந்தப்பட்டவர்களின் கடமையாகும்.
எவ்வாறான முறை வந்த போதிலும் பெரும் தேசிய கட்சிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளை இனரீதியான பிரதிநிதித்துவத்துக்குள் கணிப்பிடுவதில் கருத்துமுரண்பாடு காணப்படுகின்றது. இருந்தபோதிலும் இனரீதியான பிரதிநிதித்துவம் அவ்வினத்தவர் சார்ந்த கட்சிகளில் அல்லது குழுக்களில் இருந்து அவ்வினத்தவர்களினால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களினாலேயே பூர்த்திசெய்யப்படும். இக்கோட்பாட்டின் அடிப்படையில் தேர்தல் தொகுதிகள், பிரதேசசபை வட்டாரங்கள் நாட்டின் இனரீதியான விகிதாசாரத்துக்கேற்ப பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தும் அடிப்படையில் வகுக்கப்படுவதனை உறுதி செய்வது சமூக கடமையாகும்.
எச். ஏ. ஆலிப் சப்ரி