சுவாசிக்க முடியாமல், மயக்கமுற்ற நிலையில் 155 பெண்கள் மற்றும் யுவதிகள் வைத்தியசாலையில் அனுமதி

 

க.கிஷாந்தன்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் சுவாசிக்க முடியாமல் மயக்கமுற்ற நிலையில் 155 பெண்கள் மற்றும் யுவதிகள் 04.10.2017 அன்று காலை 10 மணியளவில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிகிச்சையை பெற்று 145 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் 10 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலை தனியார் தொழிற்சாலையாகும். இந்த ஆடைத் தொழிற்சாலையில் பெண்கள் மற்றும் யுவதிகள் உட்பட சுமார் 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

04.10.2017 அன்று காலை குறித்த தொழிற்சாலையில் பணிப்புரிகின்ற ஊழியர்கள் பகுதியில் சுவாசிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இதனால் தீடிரென மயக்கமுற்ற 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வைத்திய வட்டாரங்கள் தெரிவிப்பதாவது,

தெரியாத வாயு ஒன்று வெளியாகியுள்ள நிலையிலேயே ஊழியர்களுக்கு இந்த மயக்க நிலைமை தோன்றியுள்ளது என தெரிவித்தனர்.

இந்த நிலையில் உணவு ஒவ்வாமையினால் இந்த மயக்க நிலை தோன்றியுள்ளதா என ஊடக தரப்பில் கேள்வி எழுப்பிய பொழுது இவர்கள் உண்ட உணவிற்கும், மயக்கமுற்றமைக்கும் எந்த ஒரு சம்பவமும் இல்லை என வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஆனால் தெரியாத வாயு ஒன்று வெளியாகியுள்ளதனால் மயக்கமுற்றுள்ளார்களே தவிர உணவுடன் தொடர்புடையதாக இதை கருத முடியாது என பரிசோதனையை மேற்கொள்ளும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் உயிராபத்துக்களுக்குரிய பாதிப்பு ஏதும் இவர்களுக்கு ஏற்படவில்லை. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 155 பேரில் 145 பேர் சிகிச்சையினை பெற்றுக் கொண்டு தற்பொழுது வீடு திரும்பியுள்ளனர்.

ஆனால் 10 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவிக்கையில்,

தீடிரென சுவாசிக்க முடியாமலும், களைப்பு தன்மை ஏற்பட்டு வாந்தி எடுக்கும் நிலை தோன்றியதால் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டோம். இதுவரை இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதில்லை. தீடிரென இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து தொழிற்சாலையின் நிர்வாக உயர் அதிகாரியிடம் கேட்டபொழுது,

தீடிரென ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தொழிற்சாலையில் இயந்திரங்களும் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், உணவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், அட்டன் விசேட பொலிஸ பிரிவினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.