வட கொரியா விவகாரத்தில் முந்தய அதிபர்கள் போன்று நான் தோல்வியடைய மாட்டேன் : டிரம்ப்

 

வடகொரியா கடந்த மாதம் 6-வதுதடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன்நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது.

சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டு, ஜப்பான் நாட்டின் மீது பறந்து சென்று, பசிபிக் கடலில் விழுந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து, மிரட்டுவதற்காக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தெரிகிறது.

வடகொரியாவின் அத்துமீறலை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தின்போது பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் வடகொரியாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இதற்கிடையில், சீனா சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிறுத்தி கொண்டால் பதற்றம் தானாக நீங்கிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்காக, வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், வடகொரியா அதிபருடன் சமாதானம் பேசுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று அடுத்தடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த டிரம்ப், ’குள்ள ராக்கெட் மனிதருடன் (வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்) சமாதானம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

நாம் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வோம் என நமது வெளியுறவுத்துறை மந்திரியிடம் நான் கூறியுள்ளேன். ராக்கெட் மனிதரிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என நாம் கடந்த 25 ஆண்டுகளாக நினைத்தது நடக்கவில்லை. இனி எப்படி நடக்கும்?

இந்த விவகாரத்தில் கிளின்டன் தோற்றுப் போனார், ஜார்ஜ் புஷ் தோற்றுப் போனார், ஒபாமா தோற்றுப் போனார். ஆனால், நான் தோற்க மாட்டேன்’ என கூறியுள்ளார்.