மக்கள் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணம் என்ன? – தவிசாளர் அமீர் அலி விளக்கம் 

 

சுஐப் எம். காசிம்

மாகாணசபைத் தேர்தல் சீர்த்திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை திவீரமாகவும், உறுதியாகவும் நின்று போராடியபோதும், அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்யான பிரசாரங்களாலும் இறுதி நேர கால்வாரும் சம்பவங்களாலும் எமது கட்சி ஆதரவாக வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக அக்கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர்அலி தெரிவித்தார்.

எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர் போல் இல்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதற் பிரதியை பெற்றுக்கொண்டார். காப்பியக்கோ ஜின்னா சரீப்திPன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி மேலும் கூறியதாவது, 

மற்றவர்கள் மற்றவர்களாக தான் இருக்கின்றார்கள். யாரும் மற்றவர்களைப் போல் இல்லை என்பதனை கடந்த பாராளுமன்ற நிகழ்வு நமக்கு தெளிவாக புலப்படுத்துகின்றது. பாராளுமன்ற வரலாற்றில் 6.30க்கு இடம்பெறவிருந்த வாக்களிப்ப 8.42க்கு இடம்பெற்றமை இலங்கைச் சரித்திரத்தில் ஒரு வித்தியாசமான நிகழ்வாக கருதமுடியும். பாராளுமன்றம் அன்று தடம்புரண்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை புரட்டப்போகின்றார் என்ற பிரளயத்தைக் கிளப்பி அவருக்கெதிரான  குற்றச்சாட்டுக்களை சுமத்தி கதைகள் பரப்பப்பட்டன. அவர்  விமர்சனங்களுக்கும், ஏச்சுக்களுக்கும் ஆளாகினார்.

20வது திருத்தச்சட்டத்தை இலகுவாக நிறைவேற்றி விடலாமென நினைத்திருந்த அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மரண அடியாகியது. எனவேதான் சட்டவிரோதமான முறையில் பாராளுமன்ற நடைமுறைக்கு மாற்றமாக,  இடைச்செருகலாக மாகாணசபை தேர்தல் சீர்த்திருத்தச்சட்ட மூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்ற அரசு முனைந்தது. 

ஏற்கனவே இந்தத் திருத்தச்சட்டத்தில், மாகாண சபையில் பெண்களின் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு தொடர்பாக ஒரு பந்தியில் கூறப்பட்டிருந்த விடயங்கள் நிலையியற் கட்டளையில் இடப்பட்டிருந்தன. எனினும் அதற்கு மேலதிகமாக 18தாள்களை உள்ளடக்கிய திருத்தம் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முண்னனி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளும் தமது சமூகத்தின் பாதிப்பை உணர்ந்து  விழித்துக் கொண்டனர். எனினும் இவர்களை ஏதாவது ஒரு வழிபண்ணி சட்டமூலத்தை நிறைவேற்றிவிட அரசாங்கம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. அமைச்சர்களான மனோ, ரிஷாட், ஹக்கீம் ஹிஸ்புல்லா ஆகியோரிடம் இதற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி வலியுறுத்தினார்.  எனினும் அமைச்சர் ரிஷாட் இந்த விடயத்தில் யாரையும் நாங்கள் நம்பத் தயாரில்லை என பிரதமருக்கு முன்னே ஜனாதிபதியிடம் தொலைபேசியில்  மிகவும் தைரியமாக தெரிவித்தார். 

இந்தச் சட்டமூலம் முஸ்லிம் சமூகத்திற்கும், மலையக சமூகத்திற்கும் பாதிப்பு என்பதையும் இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை சரி அரைவாசியாக குறைக்கும் என்கின்ற அச்சத்தின் காரணமாகவே நாங்கள் விடாப்பிடியாக நின்றோம். 

அதற்கு முந்தைய நாள் ஜம் இய்யத்துல்  உலமாவுடனான சந்திப்பிலும் இந்த விடயங்கள் மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டன. 

இந்தச்சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விடயம் இறுதி நேரம் வரை மறைக்கப்பட்டிருந்தது. 

ஏளிதாக இதனை நிறைவேற்ற முடியுமென நினைத்திருந்த அரசுக்கு, எங்கள் உதவி தேவைப்பட்டது. எனினும் நாங்கள் இந்தவிடயத்தில் விடாப்பிடியாக இருந்தபோதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இன்னுமொரு புரளியை கிளப்பி அவரை எப்படியாவது மசியச்செய்வதற்கான நாடகம் அரங்கேற்றப்பட்டது. 

அமைச்சர் ரிஷாட் எவரினதோ கொந்தராத்தை எடுத்துக்கொண்டு இந்தவிடயத்தை திணிக்கப் பார்க்கின்றார் என்று பாராளுமன்ற உறுப்பினர்களையும், பிரதம அமைச்சர்களையும் நம்ப வைக்கும் ஒரு படலம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  இதனால்  தான் வேறு வழியின்றி, உள்ளதுக்குள்ளே சமூகத்திற்கு பாதுகாப்பான  சில நன்மைகளை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். இறுதியில் ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.