கிழக்கு மாகாண சபையினால் கிழக்கு மாகாண மக்கள் தோல்வியடைந்துள்ளனர் : எதிர்க்கட்சித் தலைவர்

எம்.ஜே.எம்.சஜீத்

பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தேர்தல்களில் மக்களின் வாக்குரிமையை பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளை படிப்படியாக நாம் இழந்து வருகின்றோம் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 17வது வருட நினைவு தினக்கூட்டம் ஏறாவூர் றகுமா அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் பிரதான வீதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நமது நாட்டில் தேர்தல்கள் நடைபெறும் வேளையில் தேர்தல்களின் ஊடாக மக்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் நலன்களில் கண்ணும் கருத்துமாக இருந்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிறுபான்மை மக்களின் நலன் தொடர்பாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்தார். 

1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அஷ்ரப் – சிறிமா ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான கோரிக்கையினை தலைவர் அஷ்ரப் சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் முன்வைத்தார். ஆரம்பத்தில் தலைவர் அஷ்ரபின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா இறுதி நேரத்தில் கைவிரித்தார். 

தலைவர் அஷ்ரப் அவர்கள் உடனடித் தீர்மானமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணசிங்க பிரமதாசவைச் சந்தித்து பேரம் பேசினார். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 12 வீதமாக உள்ள வெட்டுப்புள்ளியை 5 வீதமாக குறைப்பதற்கு உடன்பட்டால் ஜனாதிபதி வேட்பாளரான ரணசிங்க பிரமதாசாவுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்போம் என்ற கோரிக்கையினை முன்வைத்தார். ரணசிங்க பிரமதாச தலைவர் அஷ்ரப் அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டார். உடனடியாக நமது நாட்டில் உள்ள சிறிய கட்சிகளுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 5 வீதமாக குறைக்கப்பட்டது.

தலைவர் அஷ்ரப் அவர்கள் ஒருபோதும் மக்களின் ஆணையினை பெறுவதற்கு மக்களுக்கு பணம் வழங்கிய வரலாறு கிடையாது. முஸ்லிம் மக்களின் வாக்குரிமைக்காக பேரினவாத கட்சிகளிடம் கைநீட்டி கோடிக்கணக்கான பணத்தினையும் பெறவில்லை. இதனால் முஸ்லிம் சமூகத்தின் சுதந்திர தலைவராக இறுதிவரை செயற்பட்டதுடன், நமது நாட்டின் மீது பற்றுள்ளவராகவும், அரசியல் தலைவர்களுடனும் உண்மைக்குண்மையான உறவினை பேணி வந்ததுடன் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டார். 

அவருடைய மரணத்திற்குப் பின் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் கொள்கைகள் கொலை செய்வதுடன், தலைவர் அஷ்ரப் அவர்களின் கொள்கைக்கு மாற்றமாக செயல்படுவதற்கு தேவையானவற்றை பெரும்பான்மை கட்சிகளிடம் பெற்றுக் கொள்ளும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் தொடர்பாக சுதந்திரமான முறையில் குரல் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது,

மலையக மக்களின் புதிய பிரதேச சபைகளின் கோரிக்கைளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதற்காக அமைச்சர் மனோகனேசன் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் இருந்து சுதந்திரமாக வெளியேறினார் அதனால் மலையக மக்களின் உணர்வினை வெளிக்கொண்டு வந்தார்.

சென்ற ஜனாதிபதி தேர்தலின் போது கல்முனையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கல்முனைக்கான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என பகிரங்கமாகவே வாக்குறுதி அளித்தார். நல்லாட்சி உருவாகி 3வருடங்கள் சென்ற நிலையில் இதுவரை சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை வழங்கப்படாத நிலைமையில் பிரதம மந்திரி புதிதாக உள்ளுராட்சி சபை தற்போது வழங்கப்படமுடியாது உள்ளுராட்சி தேர்தலுக்குப் பின்புதான் புதிய உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்படும் என தெரிவித்த போது பிரதம மந்திரியினால் கல்முனையில் பகிரங்கமாக வாக்குறுதி அளிக்கப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் உண்மைக்குண்மையான உணர்வுகளை பிரதம மந்திரிக்கு தெரிவிக்க முடியாத நிலைமையில் நமது முஸ்லிம் தலைவர் செயற்பட்டுள்ளமை குறித்து நாம் கவலையடையவேண்டியுள்ளது.

தலைவர் அஷ்ரப் அவர்கள் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் கௌரவமான முறையில் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை நிறைவேற்றக் கூடிய தலைவராக செயல்பட்டார். சிங்கள கட்சிகளில் உள்ளவர்களுக்கு அநீதிகள் நடைபெற்ற போது தலைவர் அஷ்ரபிடம் வந்து முறையிட்டு நீதி கேட்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாகவே சிங்கள கட்சியின் சார்பில் அசித்த பெரேராவுக்கு தலைவர் தேசியப்பட்டியல் எம்.பி பதவியினை வழங்கிய வரலாறு உள்ளது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக பதவி வகித்த தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் எனது இல்லத்திற்கு வருகை தந்து தமிழ் ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக வருவதற்கு முயற்சி செய்கின்றனர் எனவே முஸ்லிம் சமூகத்தின் சார்பில் என்னை முதலமைச்சராக்குவதற்கு உதவி புரியுங்கள். முதலமைச்சர் பதவியில் மாத்திரம் மாற்றம் கொண்டு வருவது எனவும் ஏனைய அமைச்சர்களில் மாற்றங்கள் இல்லை எனத் தெரிவித்தார்.

நமது சமூகத்தின் சார்பில் ஹாபிஸ் நசீரை கிழக்கு முதலமைச்சராக்குவதற்கு 14 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய சத்தியக் கடதாசியினைப் பெற்று விசேட விமானம் ஊடாக திருமலை சென்று முதலமைச்சராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டவர் அடுத்த வாரம் என்னையும், விமல வீர திஸாநாயக்க அவர்களையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு எங்களோடு ஒப்பந்தம் ஒன்றை செய்து முதலமைச்சராகி  எங்களுக்கு தெரியாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இரகசிய ஒப்பந்தம் செய்து கிழக்கு மாகாண அமைச்சரவையை அமைத்தார்.

நயவஞ்சகத் தன்மையுடனும், நம்பிக்கை துரோகத்துடனும் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி அரசு எனச் சொல்லி கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்போடு கட்டி எழுப்பப்பட்ட இனங்களுக்கிடையிலான இன ஒற்றுமையினை சீரழித்ததுடன் இனங்களுக்கிடையே சந்தேகங்களை உருவாக்கியுள்ளார். 

கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சிறந்த எவ்விதமான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை ஆனால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்களை பாவித்து சிலர் தங்களின் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளனர். ஆனால் கிழக்கு மாகாண மக்கள் தோல்வி அடைந்துள்ளனர் என்ற யதார்த்தத்தினை கிழக்கு மாகாண மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.