அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பங்களாளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தினால் தான், கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த குழப்பத்தின் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாண சபையினால் நிராகரிக்கப்பட்ட 20வது திருத்த சட்டத்தை கிழக்கு மாகாண சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதிகாரப் பரவலாக்கலின் கீழ் ஒரு சுயாட்சி தேவை என கேட்டுக் கொண்டிருப்பவர்கள். இந்த நிலையில் மத்திய அரசு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை ஜனநாயகத்தை மதிப்பவர்கள். பாராளுன்றம் அல்லது மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்ததும் ஜனநாயக ரீதியில் கலைத்து மீண்டும் மக்களின் ஆணைபெற்று புதிய ஆட்சி உருவாக்க வழியமைக்க வேண்டும் அல்லது மக்களின் ஆணைக்குவிட்டு நீடிக்க வேண்டுமே தவிர மத்திய அரசின் தீர்மானமாகக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தக் கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற பங்காளிக் கட்சியான ரெலோவிற்குள் முரண்பாடு. அவர்களுக்குள் நிலையான முடிவு இல்லை. கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது ரெலோ உறுப்பினர் ஒருவர் ஆதரிக்கிறார். மற்றையவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள், அங்கு கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறார். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்னம் உட்சாகத்துடன் கை உயர்த்தி அதரிக்கிறார்.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தோ அல்லது மத்திய குழுவை அழைத்தோ 20வது திருத்தம் தொடர்பாக ஆராயவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்வில் கூட நான் கலந்துகொண்டேன். இதிலும் திருத்தம் தொடர்பாக எந்தவித கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படவில்லை.
கிழக்கு மாகாணசபையில் 20வது திருத்தத்திற்கு ஆதரவை வழங்கிவிட்டு தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் எங்களை அழைத்து அதற்கான விளக்கத்தை வழங்கினார். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் நான் பகிரங்க எதிர்ப்பையே வெளியிடுவேன்.
அரசியலமைப்பு சட்டம் அல்லது சட்ட திருத்தங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழும்போது அனைவரும் ஒன்றுகூடி ஆராயப்படுமாக இருந்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் ஒருமித்த கருத்தை தெரிவிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.