இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் மு.காவின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

 
ஆர்.ஹஸன்
 
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இது தொடர்பில் அவர் தெளிவான தீர்மானமொன்றை எடுப்பாராயின் அதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் தான் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இரு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் “மக்களுடன் மண்ணின் மைந்தன்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது முகநூல் வாயிலாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அவர்களை விமர்சித்து எதிர்ப்பதன் மூலம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. 
வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும்  ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஷ்ரப் சேரின் எதிர்பார்ப்பாகும். அதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வடக்கும் கிழக்கும் மீள இணைக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது எம்மை தமிழ் சகோதரர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். 
கிழக்கு மாகாணம் பிரிந்திருக்கும் போது எமக்கான சகல அதிகாரங்களும் அங்கு கிடைக்கும். மூவின மக்களுக்கும் சம உரிமை இம்மாகாணத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையான் முதல்வராக இருந்தார். இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நஸீர் அஹமட் முதல்வராக உள்ளார். நாளை சிங்கள சமூகத்திலிருந்து ஒருவர் முதல்வராக வரமுடியும். இவ்வாறு மூன்று சமூகத்தினரும் ஒற்றுமையாக சம உரிமையுடன் உள்ள மாகாணம் கிழக்கு மாகாணமாகும். 
நாட்டில் உள்ள 9 மாகாணங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சராகவோ, முதல்வராகவோ வர முடியும். வேறு எந்த மாகாணத்திலும் அவ்வாறு வர முடியாது. கிழக்கு மாகாணத்தையும் வடக்குடன் இணைத்தால் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ வர முடியாது போகும். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் முஸ்லிம் சமூகம் கணக்கில் எடுபடாத சிறுபான்மை சமூகமாக மாறிவிடுவோம். 
எனவே, மூன்று இனமும் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் கிழக்கு மாகாணம் தனித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளோம். வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
கிழக்கு என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் ஒவ்வொரு மகனுக்கும் சொந்தம். நாங்கள் ஆரம்பத்தில் திறமையான கிழக்கு மாகாண சபையொன்றை எவ்வித பிரச்சினையுமின்றி நிர்வகித்தோம். முதலமைச்சராக பிள்ளையான் இருந்த போது நான் அமைச்சராக இருந்தேன். விமலவீர திஸாநாயக்க, உதுமாலெப்பை, நவரட்ன ராஜா ஆகியோரும் அமைச்சர்களாக இருந்தனர். எங்களுக்கிடையில் எவ்வித பிரச்சினையுமின்றி சிறப்பான முறையில் செயற்பட்டோம். எனவே, மீண்டும் கிழக்கு மாகாணத்தில் இரத்த ஆறு ஓடுவதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் நம்மதியாக வாழ வேண்டும். 
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இந்த விடயம் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதையிட்டு மிகவும் கவலையடைகின்றோம். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் கிடையாது. நான் மிகவும் கௌரவிக்கும் ஒருவர். நான் எந்த கட்சியில் இருந்தாலும் நான் மு.காவைச் சேர்ந்தவன். அக்கட்சியின் ஆரம்ப கால போராளி என்ற ரீதியில் அக்கட்சி எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக அது பயணிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். 
எனினும், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதுவரை தெளிவான முடிவினையோ – நிலைப்பாட்டினையோ அறிவிக்கவில்லை. நாங்கள் தமிழ் தலைமைகளுடன் பேசும் போது வடக்கு கிழக்கு இணைப்புக்கு மு.கா. ஒப்புதல் வழங்கியுள்ளது என்று கூறுகின்றனர். வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியமையாலேயே மு.காவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் மு.கா. தலைமைத்துவம் இது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை. இது ஆபத்தான சூழலாகும் – நிலைப்பாடாகும். 
ஆகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அவ்வாறான கருத்துக்களை புறக்கணித்து “வடக்கு கிழக்கு இணைய இடமளிக்க மாட்டோம்” என தெளிவான கருத்தை முன்வைக்க வேண்டும். மாறாக மழுப்பல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. ஏன் எனில் விரைவில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. எனினும், சர்வதே சக்திகளின் உதவியுடன் வடக்கு கிழக்கு இணைப்புக்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான தீர்மானமொன்றை அறிவிக்காவிட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். 
மற்றவர்களது வாக்குறுதிகளை நம்பி சமூகத்தைக் கொண்டு செல்லாது சட்டரீதியான வரைபுகளுக்கு உட்படுத்திய தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். வடக்கிழக்கு இணைப்பு தொடர்பில் தெளிவான தீர்மானத்தை மு.கா. தலைமைத்துவம் அறிவிக்குமாயின் அதற்கு நாங்கள் கட்சி பேதங்களை மறந்து தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்  – என்றார்.