மஹிந்தவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்பில்  இடமில்லை  

புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது.

கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் ஊழல் ஒழிப்புக்குழுவின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

மருதானை சன சமூக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நாம் 87 முறைப்பாடுகளுக்கும் மேல் இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை முன்வைத்திருந்தோம். 

அவற்றில் சில் துணி விநியோகம் மோசடி குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை தெரிவித்திருந்தோம். அதற்கமைவாக தற்போது இந்த வழக்கிற்கான நீதி கிடைத்துள்ளது.

இருப்பினும் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள லலித்வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின்பேரிலேயே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர். 

அவ்வாறு நிறைவேற்று அதிகாரமுடைய முன்னாள் ஜனாதிபதியொருவரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதற்கு தற்போதைய அரசியலமைப்பின்  இடமில்லை. 

தற்போதைய அரசியலமைப்பின் 35 ஆம் பிரிவின் முதலாம் இலக்க சரத்தே இதற்கு பெரும் தடையாகவுள்ளது. எனினும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியொருவரால் விசேட ஆணைக்குழுக்களை நிறுவி எவர் மீதும் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். 

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும். இதற்கு தற்போதைய நல்லாட்சியின் தலைவர்கள் உடன்படுவார்களா என்பது கேள்விக்குறியாகும்.