இலங்கை பங்களாதேஷூக்கிடையிலான கூட்டுவேலைத்திட்ட அமர்வு கொழும்பில் இடம்பெறும்

ஊடகப்பிரிவு

இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு இந்த வருட இறுதிப்பகுதியில் இடம்பெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட் அவர்களை கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. 

‘இரண்டு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர வர்த்தக செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் அதாவது, 2012 – 2016 ஆண்டு காலப்பகுதியில்    வர்த்தக வளர்ச்சி 43சதவீதமாக அதிகரிக்கப்பட்டதுடன், கடந்த வருடம் வருமானமாக  142மில்லியன் அமெரிக்க டொலரை எய்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் வர்த்தக வளர்ச்சியின் வீதம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பரஸ்பர நாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்தும் காலம் தற்போது கனிந்து வருகின்றது’ என்று கூறிய பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர், இரண்டு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்பாட்டைக் கைச்சாத்திடுவதற்கான அவசியம் தற்போது எழுந்துள்ளதாக அவர் வலியுறுத்தினார். 

இந்தச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பங்களாதேஷ் அமைச்சரின் கூற்றினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இரண்டு நாடுகளின் தற்போதைய வர்த்தக வளர்ச்சியின் பிரதிபலிப்பு போதுமானதாக இல்லையெனவும் குறிப்பிட்டதோடு, இவ்வருட இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்குமிடையிலான மூன்றாவது கூட்டுவேலைத்திட்டக் குழு அமர்வை நடாத்துவதற்கு முடியும் எனவும் கருத்து தெரிவித்தார். 

சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பான எண்ணக்கருக்களை தமது அமைச்சின் அதிகாரிகள்  ஆராய்ந்து வருவதாகவும் கடந்தவருடம் ஜுலை மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன டாக்காவுக்கு விஜயம் செய்த பின்னர் வர்த்தக உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை பங்களாதேஷூடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை கைசாத்திட்டால்,  தென்னாசியாவிலேயே அதிகளவான சுதந்திர வர்த்தக  உடன்பாடுகளை மேற்கொண்ட நாடாக இலங்கை திகழும்; எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்தச் சந்திப்பில் பங்களாதேஷின் இலங்கைக்கான துதூவர் ரியாஸ் ஹமிதுல்லாவும் பங்கேற்றிருந்தார்.