ஆயிஷா (ரழி ) அவர்களும், இறை வசனங்களும்….

 

ஆயிஷா(ரலி) அவர்களின் மீது சுமத்தப்பட்ட அவதூறை நிவர்த்தி செய்யும் வகையில் இறை வசனங்கள் அருளப்பட்டன.

“உங்கள் கூட்டத்தினரும் பழி சுமத்தினார்கள். முஸ்லிமான ஆண்களும் பெண்களுமாகிய நீங்கள், உங்களைப் போன்ற முஸ்லிமானவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டாமா? சாட்சியில்லாத அவதூறுகளை நம்பியிருக்கக் கூடாது. உண்மையில்லாத ஒன்றை உங்கள் நாவுகளால் சொல்லித் திரிகின்றீர்கள். 

இல்லாத ஒன்றை திரித்துப் பேசுவது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய பாவமானதாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் இத்தகைய மானக்கேடான விஷயங்களைப் பரப்பினால் அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு. பழி சுமத்திய ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் அதற்கொப்ப தண்டனை இருக்கிறது. 

அப்பழி சுமத்தியவர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் யாவும் அறிந்தவன், விவேகம் மிக்கோன். இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் உங்களை வேதனை தீண்டியிருக்கும். மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனங்களின் மூலம் ஆயிஷா(ரலி) அவர்களின் குற்றமற்ற நிலை தெளிவாகியது. 

இந்தச் சம்பவத்தை இட்டுகட்டிய மிஸ்தஹ், ஹஸ்ஸான், ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோருக்கு எண்பது கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவனாக மூல காரணமாக இருந்த அப்துல்லாஹ் இப்னு உபைக்குத் தண்டனை வழங்கவில்லை. உலகத்தில் யார் மீது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு விடுகிறதோ அவர்கள் மறுமையில் தண்டிக்கப்பட மாட்டார்கள். மறுமையில் மகத்தான தண்டனை இவனுக்கு உண்டென அல்லாஹ் திருக்குர்ஆனில் இவனைப் பற்றிச் சொல்லிவிட்டதால், இவனைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை குலத்தைச் சேர்ந்தவர்கள் அவனுக்காகப் பரிந்து பேசியமைக்காக வெட்கப்பட்டனர். 

அவதூறு சம்பவத்தை இட்டுகட்டிய மிஸ்தஹுக்காக ஆயிஷா(ரலி) அவர்களின் தந்தை அபூ பக்ர்(ரலி) அவன் ஏழை என்பதாலும் தம் உறவினர் என்பதாலும் அவனுக்கு உதவித் தொகை தந்து வந்தார்கள். தன் மகளைப் பற்றித் தவறாகப் பேசியதால் செலவு செய்வதை நிறுத்துவதாக அறிவித்தார்கள். அப்போது அல்லாஹ், ‘உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ எதுவும் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். 

அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் அதனை மன்னித்துப் பிழைகளைப் பொருட்படுத்தாமல்விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்’ என்னும் திருக்குர்ஆனின் வசனத்தை அருளியதும், அபூ பக்ர்(ரலி), ‘ஆம், அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறி, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். 

ஒரு மாதத்திற்குப் பின் இந்தப் பிரச்சனையால் உண்டான சந்தேகங்கள், குழப்பங்கள், அவதூறுகள் மதீனாவை விட்டு முற்றிலுமாக அகன்றன.