வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார் ?

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் அவர் பதவி விலகுவார் என நம்பப்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார். இதனையடுத்து அந்த பதவிக்கு திலக் மாரப்பன நியமிக்கப்படுவார் என ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலக் மாரப்பன தற்போது அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சராக பதவியில் இருக்கிறார். 

எனினும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பத்தில் இவர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்து, பின்னர் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.