மீள் குடியேற்றத்தை முன்னின்று செய்ததற்கு இனவாதிகள் தனக்கு சூட்டிய பெயர் ‘காடழிப்பு அமைச்சர்’

ஊடகப்பிரிவு 
 
முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை  இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
 
பண்டாரவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் யு என் ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைத்துகொடுக்கப்பட்ட ஆசிரியர் விடுதி கட்டிட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்.
 
 
 இந்த நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செபஸ்தியான்  யு என் கெபிடாட் நிறுவன சிரேஷ்ட ஆலோசகர் ஹமீட் ஆகியேரும் பங்கேற்றனர்.
 
பாடாசாலை அதிபர் ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவது,
 
2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து இந்த பிரதேசத்தில் நாங்கள் காலடி எடுத்து வைத்தபோது எங்கு பார்த்தாலும் உடைந்த கட்டிடங்களாகவும் காடுகளாகவுமே காட்சி தந்தன. பாதைகள் பயணம் செய்ய முடியாதவாறு காடுகள் மண்டிக்கிடந்தன.
 
 இவ்வாறான ஒரு பிரதேசத்தில் மீள் குடியேற்றத்தை மேற்கொள்வது என்பது எவ்வாறு என்ற அச்சமும் நம்பிக்கையீனமும் எமக்கு ஏற்பட்டது. எனினும் இறைவனின் உதவியினாலும் அரசியல் அதிகாரத்தினாலும் மக்களின் ஒற்றுமையினாலும் மீள் குடியேற்றத்தை ஆரம்பித்தோம். அந்த சமயம் எந்த ஓர் அரசியல் வாதியும் எமக்கு உத முன்வராத போதும் நாம் எடுத்த முயற்சியை சவால்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் மேற்கொண்டோம்.
 
எந்த ஓர் சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது கல்வியின் அடைவு மட்டதிலும் உயர்விலுமே தங்கி இருக்கின்றது. அந்த வகையில் இடிந்து போய்கிடந்த அழிவடைந்து போய் இருந்த பாடசாலைகளை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை வந்தது. பல புதிய பாடசாலைகளை ஒரே நாளில் ஆரம்பிக்க இறைவனின் உதவியால் முடிந்தது.
 
ஓர் ஊரிலே ஒரேயொரு பாடசாலை இருந்த நிலையை மாற்றி பல ஊர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளை உருவாக்கி இருக்கின்றேம். உதாரணமாக ஒரே ஒரு பாடசாலை இருந்த பெரிய மடுவில் இன்று மூன்று பாடசாலைகள் இயங்குகின்றன. அதே போன்று காக்கையன்குளத்தில் இரண்டு பாடசாலைகள் இயங்குகின்றன. அது மட்டுமன்றி அநேகமான மீள் குடியேற்ற கிராமங்களில் இருந்த பாடசாலைகளை மீண்டும் மீள கட்டியெழுப்பியதுடன் மாத்திரமில்லாது ஆரம்ப பாடசாலைகளையும் 15 இற்கு அதிகமான பாலர் பாடசாலைகளையும் உருவாக்கியுள்ளோம். பொதுவாக மாணவர்களின் கல்வித்தேவைக்காக எம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளோம்.
 
ஜப்பானிய அரசின் உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் திறந்து வைக்கப்படும் புதிய கட்டிடங்களும் ஆசிரியர் விடுதிகளும் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருகின்றோம். 
 
ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யசூஷி அகாசி இலங்கைக்கு வந்த போது நான் விடுத்த வேண்டுகோளினாலேயே இவ்வளவு தொகைப்பணத்தை மீள் குடியேற்ற பாடசாலைகளின் கல்வி தேவைக்கென அவர் வழங்கினார். எமது மாணவர்களின் தேவை அறிந்து அவர் எம்மீது காட்டிய கருணைக்கு நான் நன்றி கூறுகின்றேன்.
 
நமக்கு கிடைத்துள்ள பௌதீக வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அதிபர்களும் ஆசிரியர்களும் முயற்சிக்க வேண்டும்.
 
இந்த விடயத்தில் பெற்றோர்களும் பூரன ஒத்துழைப்பு நல்க வேண்டும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.