இன்றுள்ள அரசியல்வாதிகளில் முஸ்லிம்களுக்குத் தனித்தலைவராகும் தகுதி யாருக்குமில்லை…

இதை மீண்டும் மீண்டும் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

இன்றுள்ள அரசியல்வாதிகளில் முஸ்லிம்களுக்குத் தனித்தலைவராகும் தகுதி யாருக்குமில்லை.

இவர்கள் அனைவரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தம்மை நம்பி வாக்களளித்த மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்தவர்கள்தாம்.

கிழக்கு மற்றும் வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஒரு தலைமைத்துவ சபையினாலேயே அணுக முடியும்.

தலைமைத்துவ சபை என்பது தன்னலம் கருதாது சேவையாற்றக்கூடிய உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் ஆளுமைகள், அரசியல்வாதிகள் போன்றோரை கொண்டிருக்கும்.

வழிதவறி வெகுதூரம் சென்றுவிட்ட முஸ்லிம் காங்கிரஸை நம்பமுடியாததனால், ஏனைய முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாக, விட்டுக்கொடுப்புக்களுடன் ஒரு கூட்டமைப்பின் மூலம் தலைமைத்துவ சபையை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் மற்றும் மார்க்க விடயங்களில் பிளவுண்டு கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் இப்போதுள்ள அரசியல் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதில் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்க இளைஞர்கள் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும். இவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று குறைகூற மட்டும் லாயக்கானவர்கள் தேவையில்லை. மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பும் ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் தைரியமாக முன்வரவேண்டும்.

தமது சுயதேவைகளுக்காக கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு அதன் தலைவர்கள் தெளிவாகத் தவறிழைக்கும் போதும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் நமது சமூகத்தின் துரதிர்ஷ்டங்களை விடுத்து, ஏனைய சமூக நலனில் அக்கறையுள்ள இளைஞர்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.

இன்றுள்ள அரசியல்வாதிகள் ஒவ்வொரு பகுதிகளிலும் தகுதியான, தன்னலமற்ற,  நல்லொழுக்கங்களுடன் கூடிய இளைஞர்/இளைஞிகளை அடையாளம் கண்டு,  எதிர்காலத்திற்கான சிறந்த அரசியல்வாதிகளாக வளர்த்தெடுக்க வேண்டும்.

வரட்டு சித்தாந்தங்கள் பேசி கூட்டமைப்பில் இணைய மறுப்பவர்களைப் புறம் தள்ளி ஏனையவர்கள் இதனை உருவாக்க வேண்டும். நடுநிலையாக சிந்திப்பவர்கள் ஒவ்வொரு தரப்பிற்கும் அழுத்தம் கொடுத்து கூட்டமைப்பை உருவாக்க பங்களிக்க வேண்டும்.

எந்த ஒரு தனிக்கட்சிக்கும் ஆதரவளிக்காது, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாக்கி, சமூகத்தில் ஒற்றுமையை உண்டாக்கி, உரிமை மற்றும் அபிவிருத்திகளை அனைவருக்கும் கிட்டச் செய்வதுவே கிழக்கின் எழுச்சியின் நோக்கமாகும்.

அஸ்ஸஹூர் சேகு இஸ்ஸடீன்

செயலாளர்

கிழக்கின் எழுச்சி