அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு அரசியலுடன் சம்பந்தப்படாத தமது குடும்பத்தினரை இலக்கு வைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில் கோட்டே பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசாங்கம் தமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாஜூடீன் கொலை வழக்கு சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தாஜூடீன் கொலைக்கு ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான டிபெண்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே நாமல் ராஜபக்ச, அரசியலுடன் தொடர்பில்லாத தமது குடும்பத்தினர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.