ஒரு உடன்பாட்டை எட்டச் செய்வதில் கிழக்கின் எழுச்சி தொடர்ந்தும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும்.

முஸ்லிம் காங்கிரஸ் பலவீனப்படுத்தப்பட்டு அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உட்பட அதன் தலைவரும் சுரத்திழந்து தோல்வியைச் சுவைக்கத் தயாராகி வரும் நிலையில், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகாமல்  தம் தலை தப்பாதா என்று ஏங்கத் தொடங்கியுள்ளார்கள்.

இதற்காக இத்தனை சிரமப்பட்டு ஏற்படுத்திய கூட்டமைப்பிற்கான முன்னேற்பாடுகளைச் சிதைக்கும்படியான சதி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் உணராமலில்லை.

ஆனால் கிழக்கின் எழுச்சி ஆரம்பத்தில் நாம் சொன்னதைப்போன்று “ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள முயலும் வரை இறைவனின் உதவி கிட்டாது” என்பதில் இன்னும் உறுதியாக இருக்கின்றோம். மாற்றத்தை நோக்கி நாம் எடுத்து வைத்த முதலடி இன்று கனியும் நிலைக்கு வந்திருக்கும் நிலையில் அதைச் சிதைக்கும் படியான நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே களைவது அவசியமாகின்றது. 

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அம்மக்களை நட்டாற்றில் விட்ட மு.கா விடமிருந்து மக்களை மீட்டு சமூகத்திற்காக ஒற்றுமைப்பட்ட  தலைமைகளுடன் பயணிக்கச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே நாம் செயற்பட்டோம்.

கூட்டமைப்பென்பது சாதாரணமாக செய்து,விட முடியாத ஒன்றே. ஆனாலும் நான், எனது கட்சி, எனது பதவி, என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி பெரும் விட்டுக் கொடுப்புக்களுடன் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியவர்களாக சமூகத்திற்காக செய்யப்பட வேண்டியது.

மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், தூய முஸ்லிம் காங்கிரஸ், NFGG என்பனவற்றுடன் மாற்றத்தை நோக்கிய பணியில் ஈடு பட்டிருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றித்து இக்கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

இம்முறை இதைச் செய்வதற்கு தவறுவீர்களானால், கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் விடுதலைக் கனவைச் சிதைத்த துரோகிகளாக வரலாற்றிலக அடையாளம் காணப்படுவீர்கள்.

முரண்பாடுகளுக்கிடையில் ஒரு உடன்பாட்டை எட்டச் செய்வதில் கிழக்கின் எழுச்சி தொடர்ந்தும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி