பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், பிணையில் விடுவித்துள்ளது.
5,000 ரூபாய் காசு பிணை மற்றும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கலபொடஅத்தே ஞானசார தேரர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை(26) காலை கைதுசெய்யப்பட்டார்.
ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த ஞானசார தேரர், நேற்று திங்கட்கிழமை(25) நாடு திரும்பியிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(26) கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள இலஞ்ச – ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஞானசார தேரர் கலந்துகொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தமை தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதவான் ஞானசாரதேரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.