“நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (திருக்குர்ஆன் 2:172)

 

மன அமைதியைப் பெறவும், உடல் நலத்தைப் பேணவும் மனிதனுக்கு இஸ்லாம் உன்னத நெறிகளை வகுத்துள்ளது. உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று போதித்த இஸ்லாம், உண்பதிலும் தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

“நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (திருக்குர்ஆன் 2:172) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

மனித வாழ்வுக்கு முக்கிய தேவையானவை உணவு, உடை, உறைவிடம். இவற்றை நிறைவேற்ற வழிவகைகள் இருந்தாலும் அதைப் பெற வரைமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. கண்டவற்றை உண்டு வாழவும், கிடைத்தவற்றை அடைந்து மகிழவும் இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி இல்லை.

உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. இதையே விதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், விலக்கப்பட்டது ‘ஹராம்’ என்றும் சொல்லலாம்.

“செத்த பிராணியும், ரத்தமும், பன்றி இறைச்சியும் அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவை ஆகும்” (திருக்குர்ஆன்-2:173) என்று திருமறை கூறுகிறது.

பன்றி இறைச்சியும், பன்றியில் இருந்து பெறப்படும் பொருட்களும் (பன்றியின் கொழுப்பு போன்றவை), இரையைக் கொல்வதற்காக நகம், பல் முதலியவற்றைப் பயன்படுத்துகின்ற விலங்குகள், பிற பிராணிகளைக் கூரிய நகத்தின் மூலம் கொன்று தின்னும் பறவைகள், ஊர்வன, புழு, செத்த பிராணிகள், முறைப்படி அறுக்கப்படாத பிராணிகள் மற்றும் பறவைகள் இன்னும் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எல்லாவிதமான ரத்தங்கள் இவை யாவும் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

‘விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் கொண்ட ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாது என்று) நபிகளார் தடை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி).

கோரைப் பற்களால் கீறிக்கிழித்து பிராணிகளைத் தின்று வாழும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய், குள்ள நரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே கோரை நகங்களைப் பயன்படுத்தி, பிற பிராணிகளைக் கொன்று தின்னும் கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகளின் மாமிசமும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே மனித இயல்புக்கு ஒவ்வாதவை ஆகும். இவற்றின் மாமிசத்தை உண்பதால், மனிதத்துக்கு எதிரான குணங்கள் மனிதனில் பிறக்க இடமுண்டு. தவிர அறிவியல் ரீதியாக இவற்றின் மாமிசம் நோய்களுக்குக் காரணமாகலாம். எனவே இவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது.

மனிதர்கள் இயற்கையாகவே செத்த பிராணியின் உணவை உண்பதை இழிவாகவே கருதுகிறார்கள். மேலும், ஆடு, மாடு போன்றவை உயிரோடு இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதில் இருந்து ரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் ரத்தம் வெளிப்படாது. இதனால் அந்த மாமிசத்துடன் உறைந்துபோன ரத்தத்தையும் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. ரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத கிருமிகள் இருக்கின்றன. அதனால்தான் ரத்தத்தை சாப்பிட இஸ்லாம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இறந்துபோன பிராணியின் இறைச்சியை உறைந்து போன ரத்தத்துடன் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

பன்றியின் மாமிசம் தடை செய்யப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லா விலங்குகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. அந்தக் கால்நடைகளின் உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிக்கிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகிறது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 110 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 29 டிகிரி வெப்பத்திற்கு மேல் பன்றிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் அவை எப்போதும் சாக்கடையில் புரண்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. எனவே பன்றியின் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதில்லை.

பன்றியின் இறைச்சி உண்பதால் மனிதனுக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. அந்த இறைச்சியில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்ற நாடாப்புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. உச்ச வெப்பத்திலும் இந்த புழுக்கள் சாவதில்லை. பன்றி இறைச்சியை உண்பதால் 60-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. 

அதிலும் குறிப்பாக பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் ‘எச் 1 என் 1’ என்ற வைரஸ் கிருமிகள் ‘ஆர்.என்.ஏ.’ மூலக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு உருமாறி மனிதர்களைத் தொற்றக்கூடியவை. இதைப் ‘பன்றிக்காய்ச்சல்’ என்கிறோம். இது தொடுவதால் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் முதியோர்களை எளிதில் தாக்கும். பலவித நோய்களின் உறைவிடமாகத் திகழ்கின்ற பன்றி இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.

ஹராம் ஆக்கப்பட்டவைகளில் நான்காவதாக, அல்லாஹ் அல்லாதவைகள் பெயரால் அறுக்கப்பட்ட மற்றும் அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட மாமிசங்களை உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற உயிரினங்களை அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவை இல்லை. செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “அது (கடல் நீர்) தூய்மையானது. அதன் இறந்தவை ஆகுமானவை” என்று நபிமொழி.

மீன் அல்லாத உயிரினங்களை அவசியம் அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீனை அறுக்காமல் உண்ணலாம். இதற்குக் காரணம் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற ரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இருந்து சிறிதளவு ரத்தம் கசியுமே தவிர ரத்தம் வடியாது; ரத்தம் பீறிட்டு ஓடாது. இதனால்தான் மீனை உயிரோடு அறுக்காமலும் உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது.