பிரிட்டனில் இருந்து சவூதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை சட்டப்பூர்வமானதே : ஐக்கிய ராஜ்ஜிய உயர் நீதிமன்றம்

பிரிட்டனில் இருந்து சவூதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை சட்டப்பூர்வமானதே என்று ரகசிய சாட்சியத்தை ஆராய்ந்த பின்னர் ஐக்கிய ராஜ்ஜிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏமனில் ஹூதி போராளிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சவூதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை இடைநிறுத்தாததன் மூலம், ஐக்கிய ராஜ்ஜிய அரசு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக வாதிடப்பட்டதை இந்த நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. 

ஹூதி போராளிகளுக்கு எதிராக சவூதி அரேபியா நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஏதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக இந்த வழக்கைத் தொடுத்த ‘ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான இயக்கம்’ தெரிவித்திருக்கிறது. 

சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்றதன் மூலம் ஐக்கிய ராஜ்ஜியம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி விட்டதாக இந்த இயக்கம் வாதிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு கருதி, வெளியிடப்படாத ரகசிய ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், சவூதிக்கு ஆயுத விற்பனை செய்வதை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய முடிவெடுப்பதில்லை என வெளியுறவுச் செயலர் எடுத்த முடிவு சரியானதே என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.