சுலைமான் றாபி, அபு அலா
அண்மையில் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடிதீவு மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை (25) கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்பேசும் கல்முனை, பாண்டிருப்பு வாழ் மக்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக பட்டதாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இதில் இந்த கொலையுடன் தொடர்புடைய 09 சந்தேக நபர்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுவதோடு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச்சென்றார்?? என்ற விடயத்தில் தெளிவான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும், வித்தியாவின் மரணத்தைப்போன்று இன்னும் ஏனைய பெண்களுக்கும் நிகழக்கூடாது.
வருடாவருடம் இவ்வாறான சித்திரவதைகள் மாணவர்களுக்கும், வேறு பெண்களுக்கும் மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் கட்டுப்படுத்தி சித்திரவதைகள் புரிபவர்களுக்கு எதிராக மரண தண்டை விதிக்கப்படவேண்டுமெனவும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட பொலிசார் மற்றும் அரசியல் வாதிகள் உள்ளிட்டோர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும் என்ற கோசங்கள்களை இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.
இதேவேளை இன்று கல்முனை மாநகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இந்த கண்டனப் பேரணிக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது.