கட்டார் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர்.
இந்த சந்திப்பு எகிப்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டார் நாட்டுடனான இராஜந்திர உறவுகளை முறித்துக் கொள்ள இந்த நாடுகள் அண்மையில் தீர்மானித்துள்ள நிலையில், குறித்த தீர்மானத்தை விலக்கி கொள்வதற்கு பல நிபந்தனைகளை கட்டாருக்கு விதித்திருந்தன.
அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இவற்றை நிறைவேற்றுவதற்கு கட்டாருக்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், மேலும் 48 மணி நேரம் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் கட்டார் அவற்றுக்கு இணக்கம் வெளியிடாத நிலையில், அந்நாடு தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர்.
இன்றைய கலந்துரையாடலின் போது கட்டார் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.