ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்துள்ளார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற அரசியலமைப்பு சட்டவாக்க நடவடிக்கை குழுவிற்கு பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக 6 அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இதுவரை யோசனைகளையே, தனது நிலைப்பாட்டையோ முன்வைக்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாக ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

எனினும் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவும் இதுவரை யோசனைகளை முன்வைக்கவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தில் இலங்கை ஒற்றையாட்சி நாடா அல்லது ஐக்கியமான நாடா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று நடைபெறும் கூட்டத்தில் இது குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்படும் என தெரியவருகிறது.