வாழ்ந்துகாட்டி வாழக்கற்றுக் கொள்வோம்…!

 

இஸ்லாம் மிகவும் கண்ணியமான மார்க்கம்.ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை சகலவற்றுக்கும் சரியான ஒழுங்குபடுத்தலை நெறிப்படுத்தி உள்ளது.இதனை எனது கண்மனி நாயகம் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்கள்.

மற்றைய சமூகம்,அயலவர் மற்றைய மதத்தாருடன் ஒரு முஃமீன் எவ்வாறு நடக்க வேண்டுமென்பதை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸுகள் தெளிவுபடுத்துகிறது.குறிப்பாக மாற்று மதத்தவர்கள் விடயத்தில் நாம் நடந்து கொள்கின்ற விடயங்கள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

நாம் ஒன்றில்

1}மாற்று மதத்தவரை தூரமாக்கி வாழ்கிறோம்.இதன் மூலம் நமது கடினமான கொள்கைகளால் தூரமாகிறோம்.

2}மாற்று மதத்தவரின் கலாச்சாரத்தை முழுமையாக பின்பற்றுகிறோம்.கலிமாவும்,ஹலாலும் மட்டுமே எஞ்சியுள்ளது.

3}மாற்றுமதங்கள் தொடர்பில் வன்முறையான பேச்சுக்கள்,எழுத்துக்களை வெளியிடுகிறோம்.இதன் மூலம் மேற்கத்திய உலகம் எம்மீது சுமத்தியுள்ள பயங்கரவாதிகள் என்ற பழிச்சொல்லுக்கு ஆதாரமாக உள்ளோம்.

இந்த நிலையில் நமக்குள் நபிகளாரின் வாழ்க்கை முறையை இயன்றளவு உள்வாங்க வேண்டும்.இஸ்லாமிய வளர்ச்சியின் ஆரம்பகால கட்டப் போராட்டங்கள் மிகவும் மாற்று மத்தவர்களின் நேரடித் தாக்குதலுடன் தொடர்புபட்டது.இருந்தும் எமது முன்னோர்களின் அழகிய முன்மாதிரிகளால் இன்று உலகம் போற்றும் முதன்மை மார்க்கமாக வெற்றிகாண வைத்தனர்.

இதற்கு மாற்று மதத்தவருடன் அதிகமானளவில் சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக் கொடுப்புடன் வாழ்ந்தார்கள்.

நாங்கள் எமது செயற்பாடுகள் மீது காட்டுகின்ற நல்ல விடயங்கள் மாற்றுமதத்தவரை நம்மீது அபிமானத்தை ஏற்படுத்த வேண்டும்.

மாறாக மாற்றுமதங்களை விமர்சிப்பதோ அல்லது ஒப்பீட்டளவில் தாக்குவதோ ஆரோக்கியமாகாது.நமக்கென்று அழகான வழிமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.கோபத்தினாலும்,உணர்ச்சிமிக்க பேச்சுக்களாலும் நமக்கான கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது.

அதிலும் சிறுபான்மையாக வாழ்கின்ற நாட்டில் மிகவும் பொருமையுடனும் மனப்பக்குவமாகவும் செயற்பட வேண்டும்.எமக்கானகலாச்சாரம்,மத உரிமை மற்றும் சுயகௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.அதனை நாமே எல்லையிட்டு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

மாறாக மற்றைய மதத்தவருடன் போட்டி மனப்பாங்குடனும், எதிலும் சமபங்குப் போராட்டத்திலும் முன்நிற்க கூடாது.ஏனெனில் நமக்குரிய மதச்சுதந்திரம் எங்கிருந்தாலும் எவராலும் பறிக்க முடியாது.

ஆதலால் எமது செயற்பாடுகள் மற்றைய மதத்தினரை ஆத்திரமூட்டுவதாக அமையக்கூடாது.ஏனெனில் நாம் தனிப்பட்ட ரீதியில் செய்கின்ற தவறுகளுக்கு மாற்று மதத்தினர் நமது குர்ஆனையும்,தூதரையுமே விமர்சிக்கின்றனர்.நாமே நமது மார்க்கத்தின் மீது கல்வீசுவதற்கு காரணமாக அமைகிறோம்.

அதுமட்டுமல்ல இன்று இஸ்லாத்தின் பக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் தினம் வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தைப் படித்தே மதம்மாறுகின்றனர்.ஒரு முஸ்லீமின் நடத்தையைப் பார்த்து மதம்மாறுபவர்கள் குறைவே.காரணம் நமது மார்க்கம் என்பதை வன்முறைகலந்த கண்டோட்டமாகவே நாங்களும் செயற்படுத்துகிறோம்.

ஆகவே எங்களுக்குள் சரியான வழிகாட்டல்அவசியமாகும்.இதன் மூலம் மாற்று மதங்களைச் சேரந்தவர்களின் மனங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இந்த பணியை பற்றி அல்லாஹ் குர்ஆனில்;

3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்;தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.

இன்னும் நபி ஸல் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் பற்றி வலியுறித்தி உள்ளார்கள்….

”இன்று நீங்கள் என்னுடைய மார்க்கத்தின் பேச்சுகளை கேட்கிறீகள். நாளை உங்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுக்கள் கேட்கப்படும். பிறகு, உங்களிடமிருந்து யார் மார்க்கத்தின் பேச்சுகளை கேட்டார்களோ, அவர்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுகள் கேட்கப்படும். எனவே, நன்கு கவனமாக கேளுங்கள். உங்களுக்கு பின்னால் வருவோருக்கு அதை ஏத்தி வையுங்கள், பிறகு அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருக்கு எத்தி வைக்கட்டும். இந்த காரியம் தொடர்ந்து இவ்வாறு நடைபெறட்டும்.

-அபு தாவூத்=

தன்னை இறைவன் என்று சொன்ன கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னிடம் சென்று அழைப்பு பணி செய்ய மூசா (அலை) அவர்களை கட்டளையிடும் இறைவன் எப்படி செய்ய வேண்டும் எனவும் கட்டளை இடுகிறான்….

20:43. “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.

20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.

இப்படியான மாற்று மதத்தவர்களின் நம்பிக்கையும் ,புரிந்துணர்வும் நம்மீது இறுக்கமான உறவினை ஏற்படுத்தும்.இதுவே எமக்கும் எமது கலாச்சாரத்துக்கும் நீண்டகால பாதுகாப்பாக அமையும்.

ஆகவே நாங்கள்,மற்றைய மதங்களைவிட ஒழுக்கநெறி ,உறுதியான ஓர்இறைவன் கௌள்கை உடைய மார்க்கத்தின் அற்புதமான படைப்பு.நமக்கான வழிகாட்டல்களை சரிராக கடைப்பிடிப்பதோடு மற்றைய மதத்தினரை காயப்படுத்தாமலும்,இருப்பதன் மூலம் அதிமான வெற்றிகளை ஈட்டலாம்.

இறைவன் இந்த றமழான் மாதத்தில் நாம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக!குர்ன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றத்தை தருவானாக!

ஆமீன்

-FAHMY MOHAMED –

UK