பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குள் மதிப்பீடுகள் பூர்த்தி செய்யப்படும் :அமைச்சர் றிசாட்

 

ஊடகப்பிரிவு

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கென 10மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை லங்கா சதொச நிறுவனம் இதுவரையில் வழங்கியுள்ளது.  இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் பிரதேச செயலாளர்களின் எழுத்து மூல கோரிக்கைக்கிணங்கவே இந்த நிவாரணம் வழங்கப்பட்டதாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடாத்திய உயர்மட்ட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் தொடர்பாக, தனது அமைச்சின் அதிகாரிகளையும் தனது அமைச்சின்  நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் அழைத்து மீளாய்வு கூட்டமொன்றை  நடத்தினார்.

அமைச்சர் இங்கு தெரிவித்ததாவது, 

இற்றைவரையில் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பிரதேசத்தில்  47கிணறுகள் சுத்தரிக்கப்பட்டுள்ளன. 190கிணறுகளை சுத்திகரிப்புச் செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஜினசேன, ரெட்ஸ்டார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை 5இடங்களில் மருத்துவ முகாமகள்  மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெள்ளத்தின் பின்னர் எலிக் காய்ச்சலுக்கும், குழந்தை நோய்களுக்குமே பெரும்பாலும் வைத்தியம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தில் குடிநீர் வசதி திருப்தியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

இன்னும் 9முகாம்களில் 112குடும்பங்கள் அதாவது, 366பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் 1796வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியாக 1735வீடுகளும், முழுமையாக 61வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

கைத்தொழில் அபிவிருத்திச் சபை மேற்கொண்ட மதிப்பீட்டின் படி 224சிறிய அல்லது நடுத்தர அல்லது மைக்ரோ நுண் கைத்தொழில் நிறுவனங்களும், தேசிய கைத்தொழில் அதிகார சபையின் மதிப்பீட்டின் படி சிறிய , நடுத்தர, மைக்ரோ நுண் வியாபாரங்கள் 1034 நிறுவனங்களும் பாதிப்படைந்து உள்ளன. 

வியாபார நிறுவனங்களை புனரமைத்து வியாபார நடவடிக்கைகளை மீண்டும் இயல்புக்கு கொண்டு வருவதற்கு ரூபா 162மில்லியன் தேவையென மதிப்பீடப்பட்டிருக்கின்றது. இவற்றில் இயந்திராதிகள் 78 மில்லியன், கட்டிடம் 23 மில்லியன், மூலப்பொருட்கள் 78மில்லியன் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் கைத்தொழில் அபிவிருத்தி சபை தனது மதிபபீட்டை பூர்த்தி செய்யவுள்ளது. இதன் பிறகு இரத்தினபுரி மாவட்டத்திலும் பின்னர் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகியவற்றிலும் தனது மதிப்பீட்டை மேற்கொள்ளும். கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குள் தனது மதிப்பீட்டை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதென  அமைச்சர் தெரிவித்தார்.