பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவசரமாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானத்துள்ளனர்.
நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் அசாதாரண சம்பவங்கள் தொடர்பிலேய பிரதமரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் மாலை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
அதன்போதே குறித்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர். அச்சந்திப்பில் நல்லாட்சியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனைத் தடுப்பதற்கான விரைவான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் அடாவடித்தனங்கள் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம் ஒழங்கு மற்றும் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயாக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர்களுடன் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
குறித்த பேச்சுவார்த்தைகளின் போதும் அமைச்சரவைக்கூட்டங்களின்போதும் முஸ்லிம்கள் மீதான அசம்பாவிதங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தொடர்ந்து வாக்குறுதியளிக்கப்பட்டபோதும் வினைத்திறன்மிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதிநிதிகளினால் ஆதங்கம் வெளியிடப்பட்டது.
மேலும் கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடிகோலாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் முஸ்லிம்கள் விவகாரத்தில் கடந்த ஆட்சியின் பாணியினை பின்பற்றுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே குறித்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு சமயோசிதமான முடிவுக்கு வர வேண்டும் என்கின்ற அழுத்தமான கருத்தும் சில பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
எனவே மருத்துவப் பரிசோதனை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திரங்கள், சமுத்திரவளங்களின் நிலையான அபிவிருத்தி, செயன்முறைகள் , பாதுகாப்பு தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதுடன் அவரைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.