பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.
அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு ஜூன் 8-ந் தேதி (இன்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரசாரம் நடந்து முடிந்த நிலையில், இன்று 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணி) நிறைவடைகிறது.
அதன்பின்னர் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒரு மணி நேரத்திற்குள் வெளிவரத் தொடங்கும்.
இந்த தேர்தலில் தெரசா மேக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், லண்டனில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கருத்துக் கணிப்பும் இதனை உறுதி செய்துள்ளன.