எல்லாம் வல்ல இறைவன் மனிதன் உள்பட இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தான். இறைவனின் படைப்பில் மிகவும் அழகிய படைப்பு, புத்திசாலித்தனமான படைப்பு மனித இனம் மட்டுமே. வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத வகையில் ஆறறிவுடன் மொழிகளை கற்றுக்கொண்டு பேசும் திறன், எழுதும் திறன் உள்பட பல்வேறு திறன்களை மனித இனத்திற்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.
இதுகுறித்து திருக்குர்ஆனில் (95:4) குறிப்பிடும்போது, ’நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ என்று தெரிவிக்கின்றான்.
ஒரு முறை நபிகள் (ஸல்) நாயகம் அவர்களை தோழர்கள் சிலர் சந்தித்து, ’அல்லாஹ்வின் தூதரே, இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை கேட்பதற்காக வந்திருக்கிறோம்’ என்றனர்.
அதற்கு நபிகள் பதில் கூறுகையில், ’ஆதியில் அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத்தவிர வேறு எந்தப்பொருளும் இல்லை. பிறகு அவனது சிம்மாசனம் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு லவ்ஹூல் மஹ்ஃபூலில் (பாதுகாக்கப்பட்ட பலகையில்) அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்களையும், பூமியையும் படைத்தான்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹூசைன் (ரலி), நூல்: புகாரி).
இறைவன் இந்த உலகத்தை எப்படிப் படைத்தான் என்பதை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் இது:
’நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்.அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு, ஆட்சிக்குக் கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)
தான் படைத்த மனிதன் தன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் திருக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கட்டளையிடுகிறான்:
’(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை’ (7:55).
மனிதனை, இறைவன் படைத்தது எதற்காக?, அந்த ஏக இறைவனை வணங்கி அவன் அருள்பெறுவதற்காகவே. இந்த புனித ரமலானில் இறைமறையின் கருத்துப்படி நாம் அனைவரும் தொழுகை, நோன்பு, ஜகாத் உள்பட அனைத்து கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றி இறைஅருளைப் பெறுவோம், ஆமீன்.