இஸ்லாமியர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதம். ரமலான் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பல மடங்கு நன்மைகளை இறைவன் நமக்கு அளிக்கின்றான்.
மற்ற காலங்களைவிட ரமலான் காலத்தில் செய்யப்படும் வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள் என அனைத்து நற்செயல்களுக்கும் இறைவன் ஏராளமான வெகுமதிகளை நமக்கு தருகிறான். எனவே அந்த வெகுமதிகளின் மதிப்பை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை நாமும் மற்றவர்களும் பெற பாடுபட வேண்டும்.
ரமலானுடைய இந்த நேரம் பொன்னானவை. இந்த நேரத்தில், வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் ஷைத்தான் நமக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை தடுப்பதோடு நம்மை நரகத்திற்கும் அனுப்பிவிடுவான். இதையே திருக்குர்ஆன் (17:18) இவ்வாறு எச்சரித்துக்கூறுகிறது:
‘எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர் களுக்கு, நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்‘.
நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நன்மைகளும், தீயவழியில் செல்பவர்களுக்கு நரகமும் உள்ளது என்பதை திருக்குர்ஆன் அழுத்தமாக கூறி எச்சரிக்கை செய்கிறது. மேலும் ஒருவருடைய பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்பதையும் திருக்குர்ஆன் வசனம் 17:15 இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்‘.
இந்த உலகம் மாயைகளால் ஆனது. அதன் கவர்ச்சியில் நாம் மயங்கிவிடக்கூடாது. தற்போது இந்த உலக வாழ்வில் வாழ்ந்தாலும், மறுமை உலக வாழ்க்கையில் நாம் கவனம் செலுத்தவேண்டும். நம்மை வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக, ஆமீன்.