உடலில் புற்றுநோய் ஏற்பட்டால் புற்றுநோய் செல்கள் பிளந்து மேலும், மேலும் பரவி நோயை தீவிரமாக்குகிறது. இதனால் கட்டிகள் ஏற்பட்டு அந்த நோயாளி இறப்பை சந்திக்க வேண்டியது வரும். 90 சதவீத புற்றுநோயாளிகள் இறப்பு இதுபோன்றுதான் நடக்கிறது.
புற்றுநோய் செல்கள் எப்படி பரவுகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அதை கண்டுபிடித்துவிட்டால் அது பரவதை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடித்துவிடலாம் என்ற நிலை இருந்தது.
அமெரிக்காவில் உள்ள ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புற்றுநோயை தடுப்பது சம்மந்தமாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர். அவர்கள் தற்போது நடத்திய ஆய்வில், புற்றுநோய் செல்கள் எப்படி பரவுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட காசினிஜெயதிலகா உள்ளிட்ட பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் இந்த மருத்துவ ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
புற்றுநோய் செல்கள் பரவும் விதம் தெரிந்திருப்பதால் இனி அவற்றை கட்டுப்படுத்திவிடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
உடலில் புற்றுநோய் செல் உருவானதும் அது ஒவ்வொன்றாக பிளவு ஏற்பட்டு உடல் முழுவதும் பரவுகிறது. அவற்றில் பிளவு ஏற்படாமல் தடுத்துவிட்டால் அதன்பிறகு அந்த செல்கள் மற்ற பகுதிக்கு பரவாது. எனவே புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் அந்த நோயாளி மேற்கொண்டு செல் பரவுதல் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாது.
இப்போது புதிய மருந்துகள் மூலம் இந்த செல் பரவுதலை தடுத்துவிடலாம் என்று இந்த ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் டேனிப்விரிட்ஸ் கூறுகிறார்.
ஏற்கனவே இந்த குழுவினர் 2 மருந்துகளை உருவாக்கி இருந்தனர். அதில் ஒரு மருந்து புற்றுநோய் செல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பரவுவதை சீர்குலைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. மற்றொரு மருந்து பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த இரு மருந்துகளையும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டால் புற்றுநோய் செல் பரவுதல் ஓரளவு தடுக்கப்படும் என்றும் கண்டுபிடித்துள்ளனர். தற்போது விலங்குகள் மூலம் இந்த ஆய்வு நடந்து வருகிறது. இதில் முழு வெற்றி ஏற்படும்போது மனிதர்களுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி பேராசிரியர் காசினிஜெயதிலகா கூறும்போது, புற்றுநோய் செல் பரவும் விதம் தெரிந்துவிட்டதால் அதன் பரவுதலை தடுக்கும் வழிகளும் தெரிவதற்கான அறிகுறிகள் ஊருவாகி உள்ளன. எனவே இதற்கு தகுதியான மருந்து விரைவில் உருவாக்கப்பட்டு விடும் என்று கூறினார்.