உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸின் கணினி சேமிப்பகம் நேற்று(சனிக்கிழமை) திடீரென முடங்கியது. இதைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரூ, காட்விக் மற்றும் பெல் ஃபாஸ்ட் விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தப்பட்டன.
அந்த விமான நிலையங்களில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படாததால் பல மணி நேரம் அவர்கள் விமானங்களிலேயே காத்திருந்தனர்.
பிரிட்டன் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களிலும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கணினி முடக்கத்தால் விமானங்களில் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸின் இரண்டு முக்கிய விமான சேவை லண்டன் நகரில் இருந்து மீண்டும் தொடங்கியது.
இது தொடர்பாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லண்டன் நகரின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலான சேவைகள் தொடங்கப்படும் என்றும், காட்விக் விமான சேவை கிட்டத்தட்ட இயல்பு நிலையை எட்டியுள்ளது.
முழுவீச்சில் விமான சேவைகள் தொடங்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயணிகளிடம் பாதிப்புகளுக்கான மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.