இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். ‘ரமலான்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’, ‘சாம்பலாக்குதல்’ என்று பல பொருள் உண்டு.
நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் லைலத்துல் கத்ர் இரவில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ, அவருக்கு அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நூல்: புகாரி, முஸ்லிம்)
நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற முழு நம்பிக்கை முதலில் வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் பலனற்றதாகும்.
நம்பிக்கை தான் நமது வாழ்க்கை; நம்பிக்கை தான் நம்மை உயர்த்தும்; நம்பிக்கை தான் நம்மை வளமாய், நலமாய் வாழவைக்கும்; அதே நம்பிக்கை தான் நமது பாவங்களையும் நிச்சயம் அழிக்கும் என்பது நோன்பு நமக்கு சொல்லும் செய்தி.
அடுத்து, ‘நன்மையை நாம் எதிர்பார்க்க வேண்டும்’. இவ்வாறு நாம் எதிர்பார்த்து இருப்பதை அல்லாஹ் விரும்பு கிறான். புனிதமிகு ரமலானில் மனிதனின் பாவங்கள் அல்லாஹ்வால் முற்றிலும் மன்னிக்கப்படுகிறது என்றால், நாம் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கவேண்டும். அதைத்தான் இந்த ரமலான் நமக்கு கற்றுத்தருகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: ‘ரமலான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்’. (திருக்குர்ஆன் 2:185)
உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த ஒப்பற்ற திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித மாதம் தான் இந்த ரமலான் மாதம்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘எவர் எனது நல்லுபதேச (குர்ஆனிய வசன)த்தை முற்றிலும் புறக்கணிக்கிறாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கைதான் இருக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளில் அவனைக் குருடனாகவும் நாம் எழுப்புவோம்’. (திருக்குர்ஆன் 20:124)
குர்ஆன் மட்டுமல்ல இதர வேதங்களான ஜபூர், தவ்ராத், இன்ஜீல் போன்ற மாபெரும் வேதங்களும் இப்புனித ரமலானிய தினங்களில் தான் அருளப்பெற்றன. இம்மாதம் திருக்குர்ஆன் அருளப்பெற்ற மாதம் என்பதால். புனித குர்ஆனை நாள் தவறாமல் நாம் ஓதி வர வேண்டும். இந்த நாட்களில் நாம் ஓதும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒன்றுக்கு எழுபது மடங்கு நன்மை எழுதப்படுகிறது.
புனித ரமலான் மாதத்திற்கு மட்டும் தனிச்சிறப்புகள் இருப்பது போல புனித நோன்பிற்கும் தனிச்சிறப்புகள் பல உண்டு.
அல்லாஹ் கூறுகிறான்: ‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய் ஆவீர்கள்’. (திருக்குர்ஆன் 2:183)
‘தக்வா’ எனும் பயபக்தியையும், இறையச்சத்தையும் புனித நோன்பு நமக்கு பரிபூரணமாய் பெற்றுத்தருகிறது. ஒரு மனிதனுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் இறையச்சமும் ஒன்றாகும். இதுதான் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படையாகும். இது இல்லாமல் நமது எந்த நற் செயல்களும் ஏற்கப்படுவதில்லை. அத்தகைய இறையச்சத்தை நோன்பு நமக்கு தருகிறது என்பதால் அதை கடைப்பிடித்து நன்மைகள் பெற முன்வரவேண்டும்.
அடுத்து இப்புனிதமிகு ரமலானில் இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருப்பது ‘லைலத்துல் கத்ர்’ எனும் புனித இரவாகும். நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களின்அறிவிப்புப்படி, ரமலான் முழுவதும் (ஏதோவொரு இரவில்) இப்புனித இரவு இருக்கிறது என்று நபிகளார் நவின்றார்கள். (நூல்: அபூதாவூது)
இந்த நபிமொழி நமக்கு சொல்லும் செய்தி, ‘புனித ரமலானில் இறுதிப்பத்துநாட்கள் மட்டும்தான் மிகமிக முக்கியமானது என்றெண்ணி முதல் இருபது நாட்களை வீணாக்கிவிடாதீர்கள்’.
நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் பலர் நோன்பு பிடிக்கின்றனர். ஆனால் பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை’. (நூல்: பைஹகீ)
‘ஸவ்ம்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘நோன்பு’ என்று பொருள். அதற்கு மூலப்பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும். அதாவது– உணவு, குடிநீர், உடல் இச்சை மட்டுமின்றி வீண் பேச்சு, வீண் பார்வை, வீண் கேட்பு என வீணான அனைத்தையும் தடுத்துக்கொள்வதற்குத்தான் உண்மையில் நோன்பு என்று பெயர்.
இதனால் தான் நபிகளார் கூறினார்கள்: ‘நோன்பு ஒரு கேடயம்’ என்று. நாம் அந்தக்கேடயத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நமது இதயத்தில் இறையச்சம் வந்துவிட்டால் எந்த ஒன்றும் நமக்கு இலகுவான ஒன்றாகி விடும். புனித நோன்பின் மாண்புகளை பேணி நடந்தால் நிச்சயம் நாம் நமது வாழ்வில் மேம்பாடு அடைவோம் என்பது மட்டும் உறுதி.