இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கன்பெராவிலுள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜூலி பிசோப் மற்றும் இலங்கை பிரதி வௌிவிவகதார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுப்பிரகடனம் மற்றும் புரிநதுணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சிறுநீரக நிவாரணம் தொடர்பான ஜனாதிபதி விஷேட செயலணி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையும், அபிப்பிராய பிரகடத்தில் இருநாட்டு பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.