ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம்: பொதுபல சேனா அமைப்பு

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்பதற்காக அவரை வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளோம் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் ஊடகப்பேச்சாளர் டிலாந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள  ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை.  

தேரருக்கு கடுமையான சுகயீனம் காரணமாகவே அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என நீதிமன்றில் தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனூஷா பேரு­சிங்க நேற்று  தெரிவித்திருந்தார். இதனையடுத்து 31 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தேரர் உயிருக்கு பயந்து மறைமுகமான இடமொன்றில் ஒளிந்திருப்பதாக அவ்வமைப்பு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.