நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் பாவமான காரியங்களை செய்து விடுகிறோம். இது நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் பாவம், விலக்க முடியாத ஒன்றல்ல.
ரமலான் நோன்பில் இன்று முதல் ‘மஅஃபிரத்’ எனும் மன்னிப்பிற்குரிய நாட்கள் ஆரம்பமாகின்றன. எனவே, இந்த நடுப்பத்து நாட்களில் அல்லாஹ்விடம் நமது பாவச்செயல்களுக்காக, பரிபூரணமான மன்னிப்பை நாம் கேட்க வேண்டும்.
அதற்கான ஒரு எளியவழி, நம்மைப்படைத்த அல்லாஹ்விடம் சரணடைந்து, ‘இறைவா, நான் தெரிந்தும் தெரியாமலும் பாவமான செயல்களைச் செய்துவிட்டேன்; எனவே, என் பாவங்களை மன்னித்து அருள்புரிவாயாக. நீயே எனக்கு பரிபூரண மன்னிப்பு வழங்குவாயாக’ என்று மனப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்’ (திருக்குர்ஆன் 24:31)
நபிகளார் நவின்றார்கள்: ‘ஆதமின் மக்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு கேட்பவர்களே’ (நூல்: இப்னு மாஜா)
ரமலான் மாதம் புனிதமான ஒரு மாதம். இம்மாதத்தில் தான் நமது பாவங்களை நினைத்து இறைவனிடம் அதிகமாக பாவமன்னிப்பு தேட வேண்டும். செய்துவிட்ட பாவச் செயல்களுக்காக தினம்தினம் வருத்தப்பட வேண்டும். ஏனெனில், ‘பாவங்களை நினைத்து வருத்தப்படுவதும் பாவமன்னிப்பு தான்’ என நபிகளார் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
நிச்சயமாக அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் முழுமையாக மன்னிப்பவனாக இருக்கிறான். இறைவன் நிச்சயம் என்னையும், என் பாவங்களை மன்னிப்பான் என்ற மன உறுதியுடன் நாம் பாவமன்னிப்பு கேட்கிற போதுதான் அல்லாஹ் நமது சிறிய, பெரிய பாவங்களை முற்றிலுமாக மன்னிப்பான்.
‘எவர் இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புத் தேடலை கட்டாயமாக்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் அனைத்து விதமானநெருக்கடிகளிலிருந்து மீண்டுவரும் வழியையும், அனைத்துவிதமான கவலைகளிலிருந்து விடுதலையையும் தருகிறான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் அவருக்கு சகலவிதமான வசதி வாய்ப்புகளையும் அல்லாஹ் வாரி வழங்குகிறான்’ என்பது நபிமொழியாகும். (நூல்:அஹ்மது)
நபிகளார் நாள் ஒன்றுக்கு எழுபது முதல் நூறு முறை பாவமன்னிப்பு கேட்பார்களாம். அப்படியானால், தினம் தினம் பாவக்கடலில் நீந்தும் நாம் எத்தனைமுறை பாவமன்னிப்பு கேட்க வேண்டும்? இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்தாகும்.