அமைச்சர் மனோ கணேசனுக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி வாதப்பிரதிவாதம்..

றிஸ்கான் முகம்மட்
இந்நாட்டுக்கு சொந்தக்காரர் சிங்களவர்; ஏனையோர் வெளியார்; சிங்களவரின் நல்லெண்ணத்தால் நீங்கள் வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்;  
– ஞானசார தேரர்
இது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தோர் என்றே மகாவம்சம் கூறுகிறது; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள் என்பது அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் மாற்ற முடியாது:;- மனோ கணேசன் 
இன்று காலை, இராஜகிரியவில்  அமைந்துள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக வந்த பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரருக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.   
பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரர், கடந்த வாரம் கோரியதன் பேரில், இன்று காலை 10 மணிக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் மனோ கணேசனை சந்திக்க, தேரருக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டு இருந்தது. 
எனினும் நேற்று திடீரென நடத்திய ஊடக மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசனை, ஞானசார தேரர் கடும் விமர்சனம் செய்து, இந்த சகவாழ்வு அமைச்சை ஒரு சிங்கள அமைச்சருக்கு கொடுக்கவேண்டும் எனக்கூறியிருந்தார். 
இதையடுத்து அமைச்சர் மனோ கணேசன் இன்றைய சந்திப்பை இரத்து செய்திருந்தார். இந்த அமைச்சை தமிழர் வகிக்கக்கூடாது எனக்கூறும் நிலையில், சந்திப்பில் பயன் இருக்க போவதில்லை என்ற அமைச்சரின் செய்தி,  இன்று காலை ஞானசார தேரருக்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்தே  ஞானசார தேரர், தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு காலை 10 மணிக்கு வந்தார். இது அமைச்சர் மனோ கணேசனுக்கு அறிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, முற்பகல் 10.45 மணியளவில் அமைச்சர் மனோ கணேசன், தனது அலுவலகத்துக்கு வந்து  ஞானசார தேரரை சந்தித்தார். 
இதன் போது ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது,  ஞானசார தேரர், அமைச்சர் மனோ கணேசனிடம்;  
இந்த சிங்கள நாட்டில், தமிழ் நாட்டு முதலைமைச்சர் போன்ற நடந்துக்கொள்ள வேண்டாம்; இது சிங்கள-பெளத்த நாடு; இந்நாட்டுக்கு சிங்களவர் மட்டுமே சொந்தக்காரர்கள்; ஏனையோர் வெளியிலிருந்து வந்தோர்; சிங்களவரின் நல்லெண்ணத்தால்தான் நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; இங்கே வாழவேண்டுமென்றால், எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்; மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து வந்தான் என்று எழுதப்பட்டுள்ளது பிழை; மகாவம்சத்தில் பொய்களும் உள்ளன. இந்த சகவாழ்வு அமைச்சை பெரும்பான்மை சிங்களவருக்கு கொடுக்க வேண்டும் என்று  கூறினார்.   
தேரர் கூறியவைகளை அமைதியாக செவிமடுத்த அமைச்சர் மனோ கணேசன், தான் கூறிவதையும் செவிமடுக்கும்படி தேரரிடம் கூறிவிட்டு;
இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு; எல்லோரும் இந்நாட்டுக்கு சொந்தக்காரர்கள்; சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தோர் என்றே மாகாவம்சம் கூறுகிறது; விஜய இளவரசன் இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு வந்து இறங்கி, ஆதிவாசி குவேனியை மணந்து, பின் அவளை விட்டுவிட்டு, தென்னிந்திய பாண்டிய நாட்டில் இருந்து, இளவரசியை அழைத்து வந்து, மணந்துக்கொண்ட பிறகே சிங்கள இனம் உருவாகியது என்றே மகாவம்சத்தில் நான் படித்துள்ளேன். எங்கள் அமைச்சு பொறுப்புகளை தீர்மானிப்பது ஜனாதிபதி; நாங்கள் மக்கள் ஆணையை பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம். சிங்களவர் மத்தியில் நான் பிறந்து வாழ்கிறேன்: எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்து கூற அவசியமில்லை; மும்மொழி சடம்மும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம், மொழிக்கொள்கை; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது; சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும் எனக்கூறினார். 
இறுதியில் இந்நாட்டில், சிங்கள பெளத்த மற்றும் தமிழ் இந்து மக்கள் எதிர்நோக்கும் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சரிடம் தருவதாகவும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து, இந்நாட்டில் சகவாழ்வை உறுதி செய்யுமாறு கூறிவிட்டு, ஞானசார தேரர், தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கட்டிடத்தில் இருந்து வெளியேறி சென்றார்.