உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.இந் நாளானது பலத்த போராட்டங்களின் பின்னர் தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட தினமாகும்.அன்று தொடக்கம் இன்று வரை ஏனைய நாடுகளை விட இலங்கை நாடு அத் தினத்திற்கு விசேட முக்கியத்துவம் அளிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இது ஒரு வகையில் தொழிலாளர்களை கௌரவப்படுத்துவதாக அமைந்தாலும் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படாது,அது அரசியல் களமாக மாறியிருப்பது அத் தொழிலாளர் தினத்தை அகௌரவப் படுத்துவதாகவும் அமைகிறது.தொழிலார் தினத்தில் தொழிலார்களை வெயியில் வாட்டி வதைக்கும் நிகழ்வு அரங்கேறுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.தொழிலாளர்கள் எனும் போது பல்வேறு மட்டத்தில் தொழிலாளர்கள் உள்ள போதும் அடிமட்ட தொழிலாளர்களை நோக்கிய பார்வையே மிகவும் அவசியமானது.இன்று இலங்கை நாட்டில் தொழிலாளர்கள் பல இன்னல்களை முகம் கொடுத்துள்ளனர்.மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி பல வருடங்களாக தீர்வை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந் நிகழ்வு நடைபெற்ற சமகாலத்தில் வறட்சி நிலவுவதன் காரணமாக அடிமட்ட தொழிலாளர்களான விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்குவது பற்றியதான கருத்தாடல்கள் சென்றிருக்க வேண்டும்.அவைகள் பற்றியெல்லாம் அரசியல் கட்சிகள் சிறிதும் கவனத்திற் கொண்டிருக்கவில்லை.
இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகளை முன்னிறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன.அவைகளை கட்டுப்படுத்தவென்றே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான தனியான பாதுகாப்பு பிரிவு அமைக்கவும் சிந்திக்கப்படுகிறது.எதிர்காலத்தில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களை செய்ய தொழிற் சங்கங்கள் தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.இப்படி இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயிரம் தேவைகள் உள்ள போதும் அவற்றை பற்றியெல்லாம் பேசாமல் அரசியல் பேசி மகிழ்ந்தமையானது மரண வீட்டில் திருமண கதை கதைப்பது போன்றே உள்ளது.நடைபெற்ற மே தின நிகழ்வுகலினுள் ஜாதிக ஹெல உறுமயவானது அடிப்படை வசதிகளற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்றினைவோம் என்ற தொனிப் பொருளில் நடாத்தி சற்று தொழிலாளர்களை நினைவு கூர்ந்திருந்தனர்.மக்கள் விடுதலை முன்னணியினரின் மே தின கூட்டத்தில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புக்களை வெளிக்காட்டும் வகையிலான அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவர்களின் கூட்டத்தில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான தனியான பாதுகாப்பு பிரிவு அமைப்பது தொடர்பிலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி மைத்திரி அரசியல் நோக்கோடு நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவே இப் பாதுகாப்பு பிரிவை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.அவ்வாறானால் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழும் போது அது அரசியல் இலாபம் கொண்டது என உறுதி செய்த பின்பு தான் இப் பிரிவு அதனை கட்டுப்படுத்த செல்ல வேண்டும்.ஒரு ஆர்ப்பாட்டம் அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்தால் அதனை மக்களிடம் வெளிப்படுத்தினாலேயே அவ் ஆர்ப்பாட்டம் தானாகவே பிசு பிசுத்து போகும்.ஜனாதிபதி முன் வைக்கும் காரணம் ஏற்க முடியாததாகும்.இதனூடாக இவ்வரசு தாங்கள் ஆர்ப்பாட்டங்களினூடாக பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.எதிர்வரும் காலங்களிலாவது குறைந்தது தொழிலாளர் தினங்களில் தொழிலார்களின் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி தொழிலாளர்களை அரசியல் கட்சிகள் கௌரவப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இலங்கையில் இடம்பெறும் மே தின நிகழ்வுகளை அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் பலத்தை வெளிக்காட்டவே பயன்படுத்தி வருகின்றன.ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இடம்பெற்ற தொழிலாளர் தினங்களுக்கும் ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இடம்பெற்ற தொழிலாளர் தினங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகளுள்ளன.ஆட்சி மாற்றத்திற்கு முன்பு மிக நீண்ட காலமாக சு.க,ஐ.தே.க,ம.வி.மு ஆகியனவே தங்களது மக்கள் பலத்தை நிரூபிப்பதன் மூலம் தங்களது மக்கள் செல்வாக்கை வெளிக்காட்டின.ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு சு.க இரு அணிகளாக பிரிந்ததன் காரணமாக சு.க,ஐ.தே.க,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான பொது கூட்டணி,ம.வி.மு ஆகிய குழுவினரிடையே பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.இதில் மஹிந்த ராஜபக்ஸவின் மக்கள் செல்வாக்கு எவ்வாறு அமையும் என்பதே அனைவரினதும் பலத்த எதிர்பார்ப்பு எனலாம்.ஆட்சி மாற்றம் நிகழ்ந்த வருடமான 2015ம் ஆண்டு மஹிந்த அணியினர் கிருலப்பனையில் ஒரு மே தின கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவில்லை.இருப்பினும் இக் கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் சென்று அவர் திரும்பி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.அவ்வருடம் இந் நிகழ்வை பிரமாண்டமாக ஏற்பாடு செய்யும் வகையில் மஹிந்த அணியினர் பலம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.இதில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமையால்,இதில் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்தால் அவரது மக்கள் செல்வாக்கை குறைத்துக் கொள்ளச் செய்திருக்கும்.இது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு சில மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வு என்பதால் மஹிந்தவின் பின்னால் அணி திரள பலர் ஒஞ்சிக் கொண்டிருந்தனர்.இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளாமையினால்,இந் நிகழ்வு மஹிந்த அணியினரின் மக்கள் செல்வாக்கை ஏளனம் செய்த ஒன்று எனலாம்.இருந்தாலும் இன்று மஹிந்தவின் பின்னால் மக்கள் அலை திரண்டு செல்வதற்கு இவ்வாறான ஏளனங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு அவர்கள் பயணித்தமையே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.அவ்வாண்டு ஐ.தே.கவும்,சு.கவும் மஹிந்த ராஜபக்ஸவின் சவால் இல்லாமையின் காரணமாக பலத்த மகிழ்ச்சியில் மே தினத்தை கொண்டாடின.
2016ம் ஆண்டய மே தினமானது இலங்கை மக்களின் பலத்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.அவ் வருடமானது மஹிந்த ராஜபக்ஸ தனது பலத்தை உணர்ந்து இவ்வாட்சியை கவிழ்க்க தனது திட்டங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு இவ்வாட்சிக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்த காலமாகும்.அவர் அவ்வாண்டு தனித்து தொழிலாளர் தினத்தை நடாத்துவார் என்று அனைவரும் நம்பினார்.2015ம் ஆண்டு மஹிந்த அணியினரின் மே தினத்தை சவாலாக கருதாதவர்கள் 2016ம் ஆண்டய மஹிந்த அணியினரின் மே தினத்தை தங்களுக்கான சவாலாக கருதி செயற்பட்டனர்.மஹிந்த அணியினர் மே தினத்திற்கு முன்பே இவ்வரசை கவிழ்ப்பதற்கான நிகழ்வுகளை பல்வேறு இடங்களிலும் நடாத்திக்கொண்டிருந்தார்.இவற்றினூடாக இம் முறை தாங்கள் மே தினத்தை தனித்து நடாத்தினால் பாரிய வெற்றியை பெறாது போனாலும் தோல்வியை சந்திக்க மாட்டோம் என்ற செய்தியை பெற்றுக்கொண்டனர்.மஹிந்த ராஜபக்ஸ,தனியாக மே தினத்தை நடாத்தாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடாத்தப்பட்டன.2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹிந்தவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தார்.மார்ச் மாதமளவிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.இன்னும் மஹிந்த குடும்பத்தினர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவியது.அன்று குறித்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்வதா என்பது கூட சற்று சந்தேகமாகவே இருந்தது.இதில் கலந்து கொள்வோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென சு.கவினால் எச்சரிக்கப்பட்டுமிருந்தது.இவ்வாறான தடைகள் அனைத்தையும் கவனத்திற் கொள்ளாமலேயே அன்று மஹிந்த ராஜபக்ஸ தனியாக மே தினத்தை நடாத்திக் காட்டியிருந்தார்.அவ் ஆண்டு அவர் நினைத்தளவு மக்களை திரட்ட முடியாது போனாலும் தோல்வியை சந்திக்கவில்லை எனலாம்.இந் நிகழ்வினூடாக இன்னும் சிறிது முயற்சி செய்தால் அவர் தனது இலக்கை அடையலாம் என்பதை புரிந்து கொண்டார்.இதன் பின்னரான அவர்களது செயற்பாடுகள் மிகவும் வீரியத்துடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.அவ்வாண்டு அவர் அவர்களது அணியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் சற்று உறுதியாக இல்லாமல் இருந்தமையே அவர் இவ்வரசின் எச்சரிக்கைகளுக்கு சிறிது அஞ்சியதை எடுத்துக் காட்டுகிறது.
எதிர்வரும் மே தினத்தினுள் இலங்கை அரசு மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தியே ஆக வேண்டும்.இன்னும் இவற்றை இழுத்தடிக்க முடியாது.இவ்வருடம் இடம்பெற்ற மே தினத்தில் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டும் மக்கள் எண்ணிக்கை எதிர்வரும் தேர்தல்களின் முடிவில் மிகவும் தாக்கம் செலுத்தும்.இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சிகளின் மக்களை ஒன்று திரட்டும் முயற்சி தீவிரமாக இருந்தது.இவ்வருடம் மஹிந்த ராஜபக்ஸ முன்னர் போன்றல்லாது சிறிதும் அச்சமின்றி முழு மூச்சுடன் மே தின விடயங்களை முன்னெடுத்தார்.இதனை தனது பலத்தை நிரூபிக்கும் ஒன்றாகவும் கருதினார்.பொதுவாக அரசியல் கட்சிகள் சிறிய பரப்பினுள் கூட்டமொன்றை நடாத்தி,அங்கு சன நெரிசலை ஏற்படுத்தி,மக்கள் அதிகம் கலந்து கொண்டதான தோற்றத்தை ஏற்படுத்தி தங்களது ஆதரவாளர்களை மகிழ்ச்சிப் படுத்துவதோடு உளவியல் ரீதியாக பலப்படுத்திக் கொள்வர்.இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது மே தினத்தை நடாத்துவதற்கு காலி முகத் திடலை தெரிவும் செய்தார்.முதலில் இவ் இடத்தை தெரிவு செய்ததற்கே அலாதித் துணிவு வேண்டும்.மஹிந்த ராஜபக்ஸ காலி முகத் திடலை தெரிவு செய்தமையை மஹிந்தவுக்கு எதிரான அணியினர் தங்களுக்கு சாதகமான விடயமாக கருதினர்.காலி முகத் திடல் 18 எக்கார் பரப்பளவு கொண்ட மிகப் பெரும் நிலப் பரப்பு என்பதால் அதனை மக்களால் நிரப்புவது சாதாரண விடயமல்ல எனவும் கருதினர்.சஜித் பிரேமதாசா போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்டத்தினர் முடிந்தால் காலி முகத்திடலை நிரப்பிக் காட்டுமாறு மஹிந்த அணியினருக்கு பகிரங்க சவால் விட்டனர்.மஹிந்த அணியினர் இம்முறை இடம்பெற்ற மே தினத்தின் போது தனது எதிரணியினரின் முகத்தில் கரியை பூசி அதனை நிரப்பி காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை யாராலும் மறுக்க முடியாது.கடந்த ஒரு வார காலமாக இலங்கை மக்களின் வாய்களில் மஹிந்த ஒன்று கூட்டி காட்டிய மக்கள் எண்ணிக்கை பற்றிய கதைகளைத் தான் அவதானிக்க முடிந்தது.அதே நேரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் மக்களை திரட்டுவதால் ஆட்சி மாறாது என கூறி மகிந்தவின் மக்கள் செல்வாக்கை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2016ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி நடாத்திய மே தின கூட்டத்தின் போது 75000 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அவ் வருடம் ஐ.தே.க ஒன்று கூட்டிக் காட்டிய மக்கள் எண்ணிக்கையானது ஏனைய கட்சிகள் ஒன்று கூட்டிக் காட்டிய மக்கள் எண்ணிகையை சிறிதும் எட்டாத காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி தனது மக்கள் செல்வாக்கை உறுதியாக நிலை நிறுத்துக்கொண்டது.இவ் வருடம் 65000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் எண்ணிக்கையானது 13.33 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.இது மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கையிழந்து ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.கடந்த முறை இடம்பெற்ற மே தினத்தில் மைத்திரி தலைமையிலான சு.க, முப்பதாயிரம் அளவிலானோரை ஒன்று கூட்டி இருந்தது.இம் முறை 58000 பேரை ஒன்று கூட்டியுள்ளது.இது 93.33 வீத அதிகரிப்பாகும்.கடந்த ஆண்டு மஹிந்த அணியினர் இருபத்தையாயிரம் அளவிலானோரை ஒன்று கூட்டி இருந்தனர்.இம்முறை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரை ஒன்று கூட்டி இருந்தனர்.இது 300 வீத அதிகரிப்பாகும்.இவ் இரு வருட மக்கள் எண்ணிக்கையானது பல்வேறு விடயங்களை சுட்டிக் காட்டுகின்றது.தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் எந்தவிதமான அரசியல் அதிகாரங்களுமில்லை.ஏனைய ஐ.தே.க,சு.க அணியினரிடம் அனைத்து அதிகாரங்களும் உள்ளன.இவ்வாறான நிலையில் இவர்கள் அனைவரையும் புறந்தள்ளி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகமான மக்களை ஒன்று கூட்டியுள்ளமை அவர் எட்ட முடியாத மக்கள் ஆதரவை தன் வசப்படுத்தியுள்ளார் என்பதை எடுத்து காட்டுகிறது.இம் முறை ஒன்று கூடியுள்ள மக்கள் எண்ணிகையை வைத்து நோக்கும் போது ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எண்ணிகையில் சிறிதளவே குறைவு உள்ளது.சு.காவின் மக்கள் எண்ணிகையில் பல மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இது சு.கவின் ஆதரவாளர்கள் கடந்த முறை யாரை ஆதரிப்பது என்ற சிந்தனையில் எவரையும் ஆதரிக்காது நடுநிலை பேணியுள்ளனர்.இம் முறை அனைவரும் ஒரு முடிவெடுத்து எவரையாவது ஆதரிக்க வேண்டும் என்ற ரீதியிலும் சிந்திக்க தோன்றுகிறது.கடந்த வருடம் ம.வி.மு 7000 அளவிலானோரையே ஒன்று கூட்டி இருந்தது.இவ்வருடம் 20000 அளவிலானோரை ஒன்று கூட்டி காட்டியுள்ளது.இவ்விடயமானது ம.வி.மு பாரிய வளர்ச்சி கண்டு வருவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த மக்கள் இவ்வாட்சியை கொண்டு வந்தார்கள்.அன்றைய ஆட்சியை விட இன்றைய ஆட்சி ஒப்பீட்டளவில் மோசமாகவே உள்ளது.இதன் காரணமாக இவ்விரு ஆட்சியாளர்களின் மீது வெறுப்புக் கொண்டு இலங்கை மக்கள் மூன்றாவது தெரிவான ம.வி.மு பக்கம் தங்களது பார்வைகளை திருப்புவதை வெளிப்படுத்தி நிற்கின்றது.
மைத்திரி தலைமையிலான சு.க அணியினரே ஐ.தே.கவின் மக்கள் எண்ணிகையை நெருங்கியுள்ளனர்.ஒரு கோணத்தில் நோக்கினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூட்டிய மக்கள் எண்ணிகையும் சு.கவின் மக்கள் எண்ணிக்கையாக குறிப்பிடலாம்.காலியில் இடம்பெற்ற மே தின கூட்டமும் எங்களுடையதென ஸ்ரீ.சு.க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவை இரண்டையும் ஒன்று சேர்த்து நோக்கினால் ஐக்கிய தேசிய கட்சியை விட பல மடங்கு மக்கள் பலத்தில் சு.க உள்ளது எனலாம்.சுதந்திர கட்சியானது இலங்கையின் பழம் பெரும் கட்சிகளில் ஒன்று.இக் கட்சியை உயர் நிலைக்கு கொண்டு போராடியவர்கள் இக் கட்சியை அழியாமல் பாதுகாக்கும் சிந்தனையில் இருப்பார்கள்.அன்று மைத்திரி சு.கவை உடைத்து வெளியேறிய போது மஹிந்த மீது பூரண திருப்தி இல்லாத போதும் சு.க தோல்வியை சந்திக்கப்போகின்றதே என மேடையில் அழுதவர்களும் உள்ளனர்.இன்று மைத்திரி தலைமையிலான சு.கவில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் கட்சி பற்றாளர்களே தவிர மைத்திரி அணியினர் அல்ல.அதிலுள்ள மேலும் சிலர் பதவியை நோக்காக கொண்டவர்களே.இவர்கள் அனைவருக்கும் மீண்டும் சு.கவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ இணைவதே சிறந்ததாகும்.அப்போது தான் கட்சி பற்றாளர்கள் கட்சியை பாதுகாப்பார்கள்,பதவி மீது பற்றுக்கொண்டவர்கள் பதவிகளை பாதுகாத்து கொள்வார்கள்.தொழிலாளர் தினம் இடம்பெற்ற மறு தினமே மைத்திரியையும் மஹிந்தவையும் இணைப்பது தொடர்பிலான முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக சு.கவை சேர்ந்த மைத்திரி இருந்தாலும் நாட்டின் அதிகாரமிக்க செயற்பாடுகளில் பிரதமரே ஈடுபட்டு வருகிறார்.இன்று ஐக்கிய தேசிய கட்சியை விட சு.க பல மடங்கு மக்கள் பலத்தில் உள்ள போது ரணிலுக்கு இத்தனை அதிகாரங்கள் இருப்பதை சு.கவை சேர்ந்தவர்களால் ஜீரணிக்க முடியாது.பல விடயங்களில் ரணிலும் மைத்திரியும் மோதிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.இதன் பிற்பாடு மோதல் ஏற்படும் போதெல்லாம் சு.கவுடன் மகிந்தவை இணைத்து ஆட்சியமைக்கும் சிந்தனைகள் சு.கவினரிடையே எழும். ஜனாதிபதி மைத்திரியை பொறுத்தமட்டில் மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொள்வது மிகவும் ஆபத்தானது.மகிந்தவின் இத்தனை வீழ்ச்சிக்கும் இவரே பிரதான காரணகர்த்தாவாவார்.அவரை மஹிந்த ராஜபக்ஸ மன்னித்து கொள்வார் என்று நம்பினால் அவரைப் போன்ற ஏமாளியாக யாரும் இருக்க மாட்டார்கள்.இவருடைய செயற்பாடுகள் ஐ.தே.கவுடனான தனது பயணத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வதாக அமையும்.மே தினத்தை தொடர்ந்து இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தில் ஐ.தே.காக்கும் சு.கவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைவதற்காக மைத்திரியினால் ஒரு யோசனை முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த மக்கள் எண்ணிகையை எதிர்கொள்ளுமளவு ஐக்கிய தேசிய கட்சிக்கும் பலமில்லை.அவர்கள் தங்களது ஆட்சியை உறுதி செய்து கொள்ள மைத்திரியுடன் பயணிப்பதே பொருத்தமானது.
இந்தளவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன காரணம் என்பது மிகவும் ஆழமாய் சிந்திக்க வேண்டிய பகுதியாகும்.இவ்வரசு அமையும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.அக் குற்றச் சாட்டுக்களில் ஒன்றையேனும் இவர்களால் இது வரை நிரூபிக்க முடியவில்லை.அவர்களை விசாரணைக்கு அழைத்தல்,அவமானப்படுத்தல் போன்ற பல செயற்பாடுகள் இவ்வரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டன.அதிலும் குறிப்பாக யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது மஹிந்த குடும்பத்தினர் கண்ணீர் சிந்தியமையானது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததோடு அனுதாபத்தை பெறச் செய்திருந்தது.மேலும்,இவ்வாறானவற்றை அவதானிக்கும் போது மஹிந்த ராஜபக்ஸ மீது இவ்வரசினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் வெறும் போலியானவை என்பதை வெளிப்படுத்துகின்றன.அன்று மஹிந்த நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாக அவரது ஆட்சியில் அது நொட்டை இது சொட்டை என குறை கூறவும் விமர்சனம் செய்யவும் முடிந்தது.எப்போதும் விமர்சனம் செய்வதும் குறை கூறுவதும் மிக இலகுவானது.தற்போது அன்று குறை கூறியவர்கள் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.தற்போது அவர்களது ஆட்சியை மஹிந்த விமர்சித்து கொண்டிருக்கின்றார்.இவ்வாறான விமர்சனங்களையும் இன்றைய சவால்களையும் இவ்வரசினரால் முகம் கொடுக்க முடியாதுள்ளது.மிக நீண்டகாலமாக எதிர்கட்சி அரசியல் செய்து பழக்கப்பட்ட ஐ.தே.கவுக்கு ஒரு சிறந்த ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள சில ஆண்டுகள் தேவைப்படும்.அவ்வாறான நேர இடைவெளி ஐ.தே.கவுக்கில்லை.
கடந்த வருட மே தினத்தை தொடர்ந்து மே இரண்டாம் திகதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தது.அதே போன்று இவ்வருடமும் மே தினத்தை தொடர்ந்து அவரது இராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.இவ்வரசு அவரின் பாதுகாப்பை குறைப்பதனூடாக அவரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த சிந்திக்கலாம்.பல விடயங்களில் மஹிந்த ராஜபக்ஸவை குறை கூறினாலும் யுத்தத்தை முடித்த கதாநாயகனாக மக்கள் மனங்களில் இருப்பதை மறுக்க முடியாது.இதன் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளமை மறுக்க முடியாத உண்மை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அல்லாமால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததால் உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை இவ்வரசுக்குள்ளது.
இவ்வரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவின் அச்சுறுத்தல் உள்ளமை மறுக்க முடியாத உண்மை.இவ்வரசு எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டுகின்ற போதும் அதன் செயற்பாடுகள் திட்டமிட்டு மிகவும் மந்தகரியில் இடம்பெறுவது போன்ற தோற்றப்பாட்டை தற்போது அவதானிக்க முடிகின்றமை இதனை உறுதி செய்கிறது.இந் நிலையில் அவரது மே தின கூட்டத்தை பார்த்தால் இவ்வரசு இக் காலத்தில் தேர்தலை நடத்தாது என்றே எண்ணத் தோன்றுகிறது.இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஸ மே தின கூட்டத்தில் வைத்து தேர்தலுக்கான சவாலை விடுத்துள்ளதால் தேர்தலை இன்னும் காலம் தாழ்த்துவது மிகவும் ஏளனமான செயலாக அமைந்துவிடும்.முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக தேர்தலை நடாத்துங்கள் என சவால் விட்டுள்ள போதும் அதனை ஏற்க யாருமே தயாரில்லை.எல்லை நிர்ணயத்தை இனியும் காரணம் காட்ட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இறுதியாக கூறப்போனால் இவ்வாண்டு மஹிந்த ராஜபக்ஸ ஒன்று கூட்டி காட்டிய மக்கள் எண்ணிக்கையினூடாக ஐ.தே.க.சு.க ஆகியவற்றை மதி கலங்கச் செய்துள்ளார் என்பதே யதார்த்தமாகும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 15-05-2017ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 81வது கட்டுரையாகும்.