வில்பத்து சரணாலயப் பகுதியில் காடழிப்பொன்று முன்னெடுக்கப்படுவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்களே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மீள்குடியேற்ற விவகாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுமே பொறுப்புக்கூற வேண்டும் என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாட்டில் நிலைகொண்டிருருந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருந்தார். அதற்காக, பிறந்த நாள் முதலே பயங்கரவாதத்தை ஒழிப்பது தான் தன்னுடைய இலக்காக இருந்தது என எவரேனும் கூறுவார்களாயின் அது பொய்யாகும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.
2005ஆம் ஆண்டில் ஜாதிக்க ஹெல உறுமயவுடன் மஹிந்த ராஜபக்ஷ ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளும் வரையில் அவர் ஒரு பெடரல்வாதியாகவே இருந்தார். நாட்டின் ஒற்றையாட்சி தொடர்பில் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ரணவக்க சுட்டிக்காட்டினார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஸ்ரீபதி சூரியாரச்சி, டிரான் அலஸ் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் தெரிவித்திருந்தனர். இது பொய் என இதுவரை எவரும் கூறவில்லை. இது தொடர்பில் இரகசிய பொலிஸில் கூட சிலர் வாக்குமூலமளித்துள்ளனர் என்றும் சம்பிக்க ரணவக்க கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இரர்ணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்ய புலிகள் இயக்கம் முயற்சித்த போது அப்போதைய அரசாங்கத்தினால் புலிகளுக்கு வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.