அகதிகளின் தேவைக்காக மனிதாபிமான ரீதியில் 120 வீடுகள்….

-சுஐப் எம் காசிம்

வடமாகாண அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கென ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தரும் கொடைவள்ளலுமான மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் அல்ஹாஜ் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த அந்த கொடைவள்ளல் முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று அங்கு மீளக்குடியேறியுள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்தார்.

“ஆரம்பக் கட்டமாக இந்த அகதிகளின் தேவைக்காக மனிதாபிமான ரீதியில் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றோம். மீள்குடியேறிய மக்களுக்கு இன்னோரன்ன தேவைகள் இருப்பதை அறிந்து கொண்டோம். இந்த மக்களுக்கு தண்ணீர் பெரும் பிரச்சினையாக இருப்பதால் அடுத்த கட்டமாக குடிநீர் தேவைக்கென நீர் வழங்கல் திட்டமொன்றும் விவசாயம் மற்றும் வேறு பல தேவைகளுக்கும் இன்னுமொரு நீர் வழங்கல் திட்டமும் ஏற்படுத்திக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று அந்த அபுதாபி தனவந்தர் தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரிலேயே நாங்கள் இந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை அறிந்து கொண்டோம். இந்த பிரதேசத்துக்கு அழைத்து வந்து மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க உதவிய அமைச்சருக்கும் நாம் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கை ஓர் அழகான நாடு. நாங்கள் எத்தனையோ நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கின்றோம். இருந்த போதும் இலங்கை மக்கள் அன்பானவர்களாகவும் பண்பானவர்களாகவும் இருப்பதை உணர்ந்து கொண்டோம். நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம்” என்றும் அந்த தனவந்தர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

 அரபுலக கொடைவள்ளலின் உதவிகளுக்காக மக்களின் சார்பிலும் எனது தனிப்பட்ட ரீதியிலும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

25 வருடங்களுக்கு மேலாக துன்ப துயரங்களில் வாழும் இந்த மக்களில் பலர் இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். கொடை வள்ளல் மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ்வைப் போன்ற மனித நேயம் கொண்ட பரோபகாரிகளும் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் அமைப்புக்களும் எங்களுக்கு உதவிகளை நல்கி வருகின்றன. அவர்களின் கருணையிலும் உதவியினாலும் இந்த பிரதேசத்தில் பல வீடுகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குடிநீர் பிரச்சினையை ஓரளவு தீர்த்து வைப்பதற்கும் அவர்கள் உதவியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.