பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதில் மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார். மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார். மக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். எங்களது நீண்டகால நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. புதிய அதிபருடன் விரிவான அளவில் முன்னுரிமைக்கான விவகாரங்களில் பணியாற்றும் எதிர்பார்ப்பில் நாங்கள் இருக்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் மக்ரான் வெற்றி பெற்ற நிலையில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்துள்ளனர்.