தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டம்

க.கிஷாந்தன்

ஆறு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தின் பிரிவுகளான உட்லெக், பச்சபங்களா, நல்லதண்ணி, சின்னதோட்டம், பிறேமோர் ஆகிய தோட்டங்களை  சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக 07.05.2017 அன்று காலை 09 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொழிலாளர்கள் கஸ்டப்பட்டு பறிக்கும் கொழுந்து கிலோவில் இருந்து அதிகப்படியான கிலோ கிராம் கழிக்கப்படுவதாகவும் ஒரு நேர நிறுவையின் போது 05 தொடக்கம் 07 கிலோ கிராம் கொழுந்து கழிக்கப்படுவதாகவும் இதனை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தோட்டத்தில் உள்ள அம்புலன்ஸ் வண்டி பல வருடகாலமாக திருத்தபடாமையால் வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை ஏற்றிச்செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தினை நிறுவை அளவிடு செய்யும்  தராசு முறையற்ற நிலையில் உள்ளது. தேயிலை தொழிற்சாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவில்லை.

குறிப்பாக மலசல கூட வசதி குடிநீர் வசதி இரவு நேரத்தில் தங்கி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை நிறுத்த போராட்டத்தினை தொடர்ந்து மலையக மக்கள் முன்ணனி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களில் பிரநிதிகள் தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு செய்யவேண்டிய விடயங்களை உடனடியாக செய்துகொடுப்பதாக ஏற்றுகொண்ட பின்னர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.