உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். ஆண்டு தோறும் 1 கோடியே 41 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் 88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 28 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
எனவே புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது.
ஆனால் சீனாவை சேர்ந்த ட்ஷின்குவா பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் பள்ளியை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்.எஸ்.பி. 90ஏ எனப்படும் புரோட்டீனை செயற்கையாக தயாரித்துள்ளனர்.
அதை மனித உடலில் இருந்து எடுக்கப்படும் ஒரு துளி ரத்தத்துடன் சேர்த்து ஆய்வு நடத்தி புற்று நோயை கண்டறிந்துள்ளனர்.
அதை சீனாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 2,347 நோயாளிகளிடம் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளனர். தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.