புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைப்பு :பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு

இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கம்பனிப்பதிவு புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றிய போது கூறியதாவது,

இந்தக் கட்டணக்குறைப்பு இலங்கையின் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கான முயற்சியாகும். 2016 ஆம் ஆண்டு நமது நாட்டில் 8289 புதிய கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2015 உடன் ஒப்பிடும் போது இந்தக் கம்பனிகளின் அதிகரிப்பு 7% உயர்ந்துள்ளது. கம்பனிச் செயலாளர்களாக பட்டய முகாமைத்துவ கணக்காளர்களும் தற்போது பணியாற்றும் வகையில் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது கம்பனி பதிவாளார் திணைக்கத்தின் வருமானம் 183% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது திணைக்கள அறிக்கைகளின் படி 1.7 பில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கிணங்க பதிவுக்கட்டணங்களில் சில அதிகரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுக் கம்பனிகளின் பதிவுகள் 17% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.  என்று அமைச்சர் கூறினார்.

வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனிகளின் பதிவுக் கட்டணம் ரூபா. 11000 இனால் குறைத்துள்ளோம்.அதாவது ரூபா 15000 இருந்த பதிவுக்கட்டணம் ரூபா 4000 இனால் குறைக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க கட்டணங்களை மீளமைத்துள்ளோம்.

மீளமைக்கப்பட்ட கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவாளர் கம்பனிகள் திணைக்களத்தில் அநேகமாக தனியார் கம்பனிகளே புதிய கம்பனிகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.