மியன்மார் அகதிகளை மிரிஹான முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி காலை  காங்கேசன்துறை  கடற்பகுதியில் வைத்து  இரு இந்தியர்கள்  உட்பட 30 மியன்மார் அகதிகள்  கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் யாழ் பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம்(2) குறித்த  அகதிகளின் வழக்கு    யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறும்     ஏனைய இரு இந்திய மீனவர்களான படகோட்டிகளையும் சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்   மியன்மார் அகதிகள் சார்பாக    சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்    நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இவர் வழக்கு நடைபெற்று முடிந்ததன் பின்னர்  ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் 
அகதி அந்தஸ்து கோரி குறித்த மியன்மார் நாட்டு மக்கள் வந்ததால் அவர்களை ஏதாவது அகதி அந்தஸ்து வழங்கும் நாட்டுக்கு அனுப்பும் வரைக்கும் இலங்கையில் தஞ்சமளிக்குமாறு   நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தோம்.இதனடிப்படையில்  மல்லாகம் நீதிவான்  நீதிமன்றம் 30 மியன்மார் நாட்டவர்களையும் உடனடியாக மிரிஹானயிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தது என குறிப்பிட்டார் .
இந்த  மியன்மார் அகதிகளில்    16 சிறுவர்கள் உட்பட 7 பெண்கள் 7 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.