நேற்று அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அவரின் முக நூல் பதிவில் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும் அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுப்பதற்காகவே அங்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீம் இறக்காம பிரதேசத்து மக்களை சந்தித்து பேசியிருந்தார்.மேலும்,அம்பாறை மாவட்டத்தின் ஒரு திருமண நிகழ்விலும் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது.இதனால் எப்படி பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபு மற்றும் அத்துமீறிய காணி அபகரிப்பு போன்றவற்றை தடுக்க முடியும்?
பெளத்த சிலையை நிறுவியவர்கள் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள்.பௌத்த மடாலயத்தை கட்ட முயற்சிப்பவர்களும் பௌத்தர்கள்.அப்படி இருக்க இறக்காம முஸ்லிம் மக்களுடன் பேசி தடுக்க முடியும் என்றால் உன் சாணக்கியத்தை போற்ற வார்த்தைகளில்லை.முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் சிலர் இதற்கு கையொப்பம் வழங்கியதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகிறார்.கையொப்பம் வைத்தவர்கள் முஸ்லிம் என்பதால் அச் சிலையை முஸ்லிம்களே வைத்தார்கள் என அமைச்சர் ஹக்கீம் சிந்தித்திருக்கலாம்.
நான் ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன்.இப் பிரச்சினை விரைவில் தீருமென கூற விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து வர வேண்டிய அவசியமில்லை.இதற்கு முன்பு பிரதமருடன் கதைத்து ஒரு வாரத்தில் சிலை அகற்ற நடவடிக்கை எடுத்தது போன்றா ஜனாதிபதியுடனும் கதைத்தீர்கள்? பணம் மிச்சமாக இருந்தால் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.மறுமைக்காவது பயன்படும்.உலங்கு வானூர்தி கண்டு இறக்காம மக்கள் வாய் பிளந்து விடுவார்கள்.நாம் அவர்களை இலகுவாக நம்பவைத்து சென்று விடலாம் என்று அமைச்சர் ஹக்கீம் கணக்கு போட்டிருக்கலாம்.ஜனாதிபதியுடன் கதைத்த செய்தியை கூற தனது கிழக்கு மாகாண படை பட்டாளம் எல்லோரையும் இறக்காமம் அழைத்தமையே அவர் அந்த மக்களை படம் காட்டி ஏமாற்ற முனைவதை எடுத்துக் காட்டுகிறது.அப்போது தானே வாகனங்களும் ஆட்களும் நிறைந்து தெரிவார்கள்.
இறக்காம சில வைப்பென்பது அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலான விடயமாக மாறி இருந்தாலும் அதனை வைத்து அவர் இயன்றளவு அரசியல் செய்ய முனைகிறார்.சிலை வைப்பென்பது இறக்காம முஸ்லிம்களின் பிரச்சினை மாத்திரமல்ல.அந்த மக்கள் கட்சி பேதமின்றி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தையும் தாங்கள் செய்தது போன்று காட்ட முற்பட்டார்கள்.இவ்விடயத்தில் தாங்கள் உளச் சுத்தியுடன் செயற்படுகிறோமென மக்களிடம் காட்டுவதே அமைச்சர் ஹக்கீமுக்குள்ள தேவையாகும்.அது போன்று கடந்த சனிக்கிழமை ஓட்டமாவடி வந்த அமைச்சர் றிஷாதை இறக்காமத்தை சேர்ந்த சிலர் சென்று சந்தித்துள்ளனர்.அமைச்சர் றிஷாதின் பதில் இவர்களுக்கு திருப்திகரமாக அமைந்ததால் எங்கே இறக்கமமும் தங்களை விட்டு சென்று விடுமோவென அமைச்சர் ஹக்கீம் அஞ்சி இருக்கலாம்.இதனை குறித்த மக்கள் சந்திப்பில் ஒரு நபர் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பும் போது உறுதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பிரச்சினையில் தயா கமகே சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்விடயத்தை ஜனாதிபதியிடம் பேசுவதை விட தயா கமகே அங்கம் வகிக்கும் ஐ.தே.கவின் தலைவரான பிரதமரிடம் கதைப்பதே பொருத்தமானது.மேலும்,பௌத்த மடாலயம் அமைப்பதென்பது அண்மைக் காலத்தில் தோன்றிய பிரச்சினை என்றாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே சிலை வைக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன? அவரால் இதில் சிறிதும் முன்னேற்றம் காண முடிந்ததா?
சிலை வைத்த போது ரணிலை சந்தித்ததாக கதை ஒன்றை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இருந்தனர்.இப்போது மடாலய பிரச்சினை எழ ஜனாதிபதியுடன் கதைத்ததான கதை எழுகிறது. பிரச்சினைகள் துளிர் விடும் காலத்தில் துள்ளித் திரிவதை விட பிரச்சினை முடியும் வரை அவைகள் தொடர்பிலான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதே ஒரு சமூக தலைவனின் கடமை.
ஜனாதிபதியிடம் கதைக்கும் போது அவர் பேசுபவர்களுக்கு சாதகமாகத் தான் அந் நேரத்தில் கதைப்பார்.அதனையெல்லாம் நம்பி விட முடியாது.அவர் இது வரை இவ்விடயம் தொடர்பில் செய்த முன்னேற்பாடுகள் என்ன.குறித்த இறக்காம மக்கள் சந்திப்பில் சிலவற்றை பகிரங்கமாக கூற முடியாதென அமைச்சர் ஹக்கீம் கூறுகிறார்.அப்படியானால் சாதித்துவிட்டு மக்கள் சந்திப்பை நடாத்தி காட்டியிருக்கலாமே! அன்று சிலை வைத்தது முதல் இன்று வரை அதனை அகற்ற உறுதியாக இருந்திருந்தால் அவர்கள் இந்தளவு வந்திருக்க மாட்டார்கள்
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை..