அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை மீட்பதற்காக சசிகலாவின் அ.தி.மு.க. அம்மா அணியினரையும், ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினரையும் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு, ராயப்பேட்டையில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்குவதாக இருந்தது.
ஆனால், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இரு தரப்பினரிடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை முடங்கியது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினரை முழுமையாக விலக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று ஓ.பி.எஸ். அணியினர் திட்டவட்டமாக அறிவித்தனர். இந்த நிபந்தனைகளை சசிகலா தரப்பு அ.தி.மு.க. அம்மா அணியினர் ஏற்க மறுத்து விட்டனர்.
அதேசமயம், அ.தி.மு.க அம்மா அணியில் உள்ள தலைவர்களின் பேச்சு, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக வந்த செய்தி ஆகியவை ஓ.பி.எஸ். அணியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ். அணியினரின் நிபந்தனைகளால் எடப்பாடி அணியினர் மவுனமாகி விட்டனர். நிபந்தனை இல்லாமல் பேச வந்தால், நாங்களும் பேச தயாராக இருக்கிறோம் என்று கூறி முடித்து விட்டனர். அதன்பின்னர் இணைப்பு முயற்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இந்த சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘பேச்சுவார்த்தைக்கான சூழல் கனிந்து உள்ளது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கான ஒரு நல்ல சூழல் ஏற்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் தனியாக ஆலோசனை நடத்தப்பட்டு, முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.