நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரம்: றிசாட்டின் முயற்சியும் அதாவுல்லாவின் கருத்தும்

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் நுரைச்சோலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் யாருக்கும் கொடுக்கப்படாமல் காடாகிக் கிடக்கின்ற நிலையில், அவற்றை பயனாளிகளுக்கு பகிர்;கின்ற விடயத்தில் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக, மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனால் தயார்படுத்தப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து இவ்விவகாரம் பொதுத் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த வீட்டுத்திட்டம் எவ்வாறு, எந்த நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது என்பதையும் அதனை பகிர்ந்து கொடுப்பதில் ஏற்பட்ட தடைகளையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். சுருங்கக் கூறின்,சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரப் சவூதி அரேபிய இளவரசரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, சவூதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் நிதியுதவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கமைய. ஆடையாளம் காணப்பட்ட நிலப்பகுதியான நுரைச்சோலையில் 500 வீடுகள் உள்ளடங்கலாக அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஆனால், இதற்கு அடிக்கல் நாட்டுவதற்கு சவூதி அதிகாரிகள் வந்த வேளையிலேயே,தீகவாபி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த சிங்கள காடையர்கள் அங்கு புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர். அதன்பிறகு பல தடைகள் ஏற்பட்டன.

பகீரத பிரயத்தனங்களுடன், 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதிச் செலவில் இவ்வீட்டத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்தது. ஆனால், சிங்கள கடும்போக்காளர்கள்இவ்வீட்டுத்திட்டம் தீPகவாபி புனித பூமிக்குள் வருவதாக கூறி முரண்பட்டனர். முஸ்லிம்களுக்கு மட்டும் இவற்றை வழங்குவதை முற்றாக எதிர்த்து, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ்வாறிருக்க, அப்போது பிரதம நீதியரசராக சரத் என் சில்வா ஓய்வுபெறுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் இனவிகிதாசாரப்படி இவ்வீடுகளை எல்லா இனங்களுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அவர் தீர்ப்பெழுதி விட்டுச் சென்றார்.

அதற்கு முஸ்லிம்கள் உடன்படாமையால் அன்றிலிந்து இவ்வீடு காடாகிக் கிடக்கின்றது. எந்தளவுக்கு என்றால், ஒரு ராஜாவைப் போல அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருந்த முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவினால் கூட நேரடியாக வந்து வீட்டுத் திட்டத்தை திறந்து வைக்கவில்லை. சவூதி அதிகாரிகளை அழைத்து அலரி மாளிகையில் மூடிய அறைக்குள் இருந்து கொண்டு, 320 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை திறந்து வைக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு இவ்வீடுகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க பல அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

அமைச்சரவைப் பத்திரம்

இந்நிலையிலேயே,மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அண்மையில் சமர்ப்பித்திருந்தார். இதன் முழுமையான உள்ளடக்கங்களை அறியக் கிடைக்கவில்லை என்றாலும்,சில அடிப்படைத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி,தற்போதிருக்கும் 500 வீடுகளில் 303 வீடுகளை முஸ்லிம்களுக்கும் 100 வீடுகளை தமிழர்களுக்கும் 97 வீடுகளை சிங்களவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்கான அங்கீகாரத்தை பெறும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பாரிய வீட்டுத் திட்டம் யாருக்கும் பயன்படாமல் வீணாகுவதை விட யாருக்காவது பயன்படட்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை அமைச்சர் றிசாட் மேற்கொண்டிருப்பதாக மேலோட்டமாக கருத முடியுமாயினும், இவரது இந்த நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஒருவித எதிர்வினையை தோற்றுவித்திருக்கின்றது எனலாம். குறிப்பாக, இம்மாவட்டத்தின் அரசியல்வாதியும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியிருக்கின்றார். அதாவுல்லாவுக்கும் றிசாட்டுக்கும் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் நலனும் அதன் பெயரிலான பனியுத்தமும் இருக்கின்றது என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு இவ்விடயத்தை நோக்குவது நல்லது.

இக்கடிதத்தில் அதாவுல்லா பல விடயங்களை தொட்டுப் பேசியிருக்கின்றார். முக்கியமாக.உங்களது அமைச்சரவை பத்திரத்தின் உள்ளடக்கங்களை நோக்கும் போது அது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணி உரிமைக்கு வேட்டு வைக்கும் முயற்சியாகவே தெரிகின்றது.இவ்விவகாரத்தின் பின்னணியில் உள்ள இனவாதிகள் பற்றி நீங்கள் அறியாமல் இருப்பதும் கவலையளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள அதாவுல்லா,இங்குள்ள மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் றிசாட் பதியுதீன்அவசரமாக உள்நுழைந்திருப்பதை அரசியல் நோக்கங் கொண்டதாக பார்த்திருக்கின்றார்.

‘இது வீடுகள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. ஏனெனில் இம்மாவட்டத்தில் உள்ளதமிழ், சிங்கள மக்கள் குடியேறுவதற்கு அதிக காணிகள் காணப்படுகின்ற போதிலும் முஸ்லிம்கள் குடியேறக்கூடிய ஒரேயொரு மேட்டுநிலக் காணியாக நுரைச்சோலை பகுதி காணியே காணப்படுகின்றது. இந்நிலையில் தெலைவில் உள்ள தீகவாபி விகாரைக்கும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும்நுரைச்சோலை என்ற காணிக்கும் முடிச்சுப் போடுவதன் நோக்கம் இக்காணியை பறிப்பதற்கான சூழ்;ச்சியே ஆகும். அந்த நோக்கத்திற்காகவே, சம்பிக்க ரணவக்கவை தலைமையாகக் கொண்ட கட்சியினர் இதற்கு எதிராக வழக்குப் போட்டு அந்த தீர்ப்பையும் பெற்றுக் கொண்டனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய விடயங்கள்

இவ்விவகாரம் தொடர்பில் தனக்கு களங்கம் கற்பிக்கப்பட்டதையும் அதாவுல்லா இக்கடிதத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி இங்கு குறிப்பிட வேண்டும். பேரியலுக்கும் அதாவுல்லாவுக்கும் அரசியல் போட்டி காணப்பட்ட அக்காலப்பகுதியில்,இவ்வீட்டுத் திட்டம் அமைவதையும் அதனால் பேரியலுக்கு புள்ளிகள் விழுவதையும் விரும்பாத அதாவுல்லா,சிங்கள மக்களை உசுப்பேற்றி விட்டதாகவும், அதன்பின்னரே இவ்விவகாரம் பூதாகரமானதாகவும் அவர் மீது ஒரு விமர்சனம் இருக்கின்றது. அதை அவர் பல தடவை முற்றாக மறுத்துரைத்துள்ள போதிலும் இன்னும் அவ்வாறான கதையொன்று உள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே முன்னாள் அமைச்சராக இருந்து, தற்போது அரசியல் அதிகாரம் இல்லாதிருக்கின்ற அதாவுல்லா மேற்படி பகிரங்க மடலை எழுதியிருக்கின்றார்.

எது எப்படியிருந்த போதிலும்,ஏதோவொரு மக்கள்சார்ந்த காரணத்திற்காக ஒரு அமைச்சருக்கு ஊடகத்தின் வாயிலாக பகிரங்க மடல் எழுதுவதற்கு அதாவுல்லா முன்வந்திருக்கின்றமை சிறப்பான முன்னுதாரணம் என்றே சொல்ல வேண்டும். இனவாதத்தை வளர விட்டவராக பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தோற்கும் வரைக்கும் அவருக்கு நன்றிக் கடன் உடையவராக இருந்து, அதன்மூலமே தேர்தலில் தோற்றுப்போனவர் என்று தேசிய காங்கிரஸ் தலைவரை சொல்ல முடியும். அத்தோடு,அப்போதல்லாம் இனவாததத்திற்கு எதிராக பகிரங்கமாக பேசாதவர் என்ற விமர்சனத்தை எதிர்கொண்ட அதாவுல்லா இன்று இனவாதம் பற்றி அமைச்சர் றிசாட்டுக்கு அறிவுறுத்துவது நல்ல மாற்றமாகவே தெரிகின்றது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் முக்கியமானவை. அவற்றுள் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனிப்பை பெறவேண்டியவையாக உள்ளன. அதாவது,அமைச்சர் றிசாட்டின் முயற்சியின் ஊடாக ஏதோ நியாயத்தின் பெயரில், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகக் கூடிய ஒரு காணிப் பரப்பில் சிங்களவர்களை கொண்டு வந்து குடியேற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற காணியின் அளவு மேலும் குறைந்து விடுமா என்ற விடயமும்,அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் ஒருசில முக்கிய அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடாமல் றிசாட் அவசரஅவசரமாக இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்திருக்கின்றார் என்பதுமே கவனிக்கத்தக்க அவ்விரு முக்கிய பிரச்சினைகளாகும்.

அமைச்சரின் விளக்கம்

தேசிய காங்கிரஸ் தலைவர் எழுதிய மேற்படி கடிதத்திற்கோ மற்றும் அமைச்சர் றிசாட்டின் இந்த நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டோரின் விமர்சனங்ளுக்கோ றிசாட் பதியுதீன் இன்னும் எவ்விதமான பதில் கருத்துக்களையும் வெளியிடாத நிலையில், இது பற்றி அவரிடம் வினவிய போது பல விடயங்களை குறிப்பிட்டார்.

அமைச்சர் றிசாட் தனது நிலைப்பாட்டை கூறுகையில்,’இந்த வீடுகள் நீண்டகாலமாக காடாகியும் சிதைவடைந்த நிலையிலும் காணப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் வழங்க வேண்டும் என இனவாதிகள் கோருவதாலும் அவர்களது நிலைப்பாட்டையோ நீதிமன்ற தீர்ப்பையோ நடைமுறைப்படுத்துவதில் முஸ்லிம்களுக்கு விருப்பமில்லை என்பதாலும் இவ்விடயம் இன்னும் இழுபறியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. பெருந்தொகைப் பணம் செலவழித்து கட்டப்பட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகள் யாருக்கும் பயன்படாமல் கிடக்கின்றது.’

‘எனவேதான், இவ்விடயம் தொடர்பாக வீடுகளை நிர்மாணித்த சவூதி அமைப்பை சந்தித்து பேசினேன். அவர்கள் இது குறித்து கவலை வெளியிட்ட போதும் உள்நாட்டு விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இருப்பினும்,முஸ்லிம்களுக்கு அவசியம் என்றால் வேறு ஒரு இடத்தில் இன்னும் ஒரு தொகுதிவீடுகளை கட்டித்தர முயற்சிப்பதாகவும் சொன்னார்கள்.
இதன்பிறகு பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் இது விடயமாக பேசினேன். சட்டமா அதிபரின் ஆலோசனையும் மாவட்ட அரச அதிபரின் கருத்தும் பெற்றுக் கொள்ளப்பட்டது. பலமுறை கலந்துரையாடிய பின்னரே அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தோம்’ என்று தெரிவித்தார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் படி,303 வீடுகளை முஸ்லிம்களுக்கும் சுமார் 100 வீடுகள் தமிழர்களுக்கும் 97 வீடுகளை சிங்களவர்களுக்கும் வழங்குவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது. இது தவிர மறைமுகமான உள்ளடக்கங்களோ அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்ட முன்மொழிவுகளோ அதில் இல்லை என்றும் அமைச்சர் றிசாட் கூறுகின்றார்.
இதேவேளை, அம்பாறையில் இடம்பெற்ற மாவட்ட மட்ட கூட்டம் ஒன்றில் அரசாங்க அதிபர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகளின் சம்மதத்துடன் 303,100,97 என்ற அடிப்படையில் பகிர்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே தனது அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தான்தோன்றித்தனமாக அதைச் செய்யவில்லை என்றும் அமைச்சர் றிசாட் அடித்துக் கூறுகின்றார்.இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக றிசாட் கூறுகின்றார்.இது குறித்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லா போன்றார் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்விடயத்தில் அமைச்சர் றிசாட்டின் முயற்சியால் சாதக பாதகங்கள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பது மட்டுமன்றி, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா போன்றோரின் கருத்தையும் சாதமாகவும் விமர்சன ரீதியாகவும் நோக்க முடியும். இவ்விவகாரத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. அவ்விரண்டு பக்கங்கள் குறித்தும் இங்கு பேச வேண்டியிருக்கின்றது.

இரண்டு பக்கங்கள்

நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் முடிவுறுத்தப்பட்டு அதன் திறப்புக்கள் அப்போதைய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்து விட்டன. தீர்ப்பு வழங்கப்பட்டு 8 வருடங்களாகி விட்டன. ஆயினும் இன்னும் நியாயமான எந்த அடிப்படையிலும் இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. கிழக்கில் அதிகாரத்தில் இருந்த தேசிய காங்கிரஸ் தலைவரும், அரசியல் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இன்று வரையும் குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் பெற முடியாமலே போயிருக்கின்றமை கண்கூடு.

பெருந்தொகை பணம் செலவிடப்பட்டு எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு சிறிய கிராமம் போல நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீட்டுத் திட்டத்தை பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் எதுவும் சாத்தியப்படவில்லை. அல்லது சாத்தியப்படக் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், சிங்களவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று முஸ்லிம்களும் முஸ்லிம்களுக்கு முழுமையாக வழங்க விடமாட்டோம் இனவாதிகளும் பிடிவாதமாக இருப்பதால் அவ்வீடுகளை யாருக்குமே கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படியே போனால் இதற்கு முடிவு என்ன என்பதை சிந்திக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் பொதுமகனுக்கும் இருக்கின்றது. அதேபோன்று. ஒருவேளை றிசாட் பதியுதீன் தனது முயற்சியை வாபஸ் பெற்றுக் கொண்டாலும்,இவ்வீடுகளை மீட்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையும், அதை யார் முன்னின்று மேற்கொள்வது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆட்சி மாறினானும் காட்சி மாறவில்லை என்பதை நாட்டில் இடம்பெறும் அண்iமைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இவ்வாறிருக்கையில்,’தங்களால் முடியுமாயின் அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வீடுகளையும் காணியையும் பகிர்ந்தளிப்பதற்கு நல்லாட்சியை வழிவிடச் சொல்லுங்கள்’ என்று அதாவுல்லா இக் கடிதத்தில் அமைச்சர் றிசாட்டை கேட்டிருக்கின்றார்.

அப்படியென்றால்,எல்லா அதிகாரத்துடனும் அபிவிருத்திகளை செய்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மஹிந்த அரசாங்கத்திடமிருந்தும் இதுபோன்ற காணிப்பங்கீட்டு அதிகாரங்களை பிரதேச செயலருக்கு பெற்றுக் கொடுக்க முயற்சித்து, அது சாத்தியப்படாமல் போயிருக்க வேண்டும். அப்படியென்றால், அமைச்சர் றிசாட்டினால் அதைச் செய்வது எந்தளவுக்கு சாத்தியமானது என்பதிலும் சந்தேகங்கள் இருக்கின்றன.

எனவே இப்போதிருக்கின்ற சூழலில் யாருக்காவது இவ்வீடுகள் பயனளிக்கட்டும் என்றும் தேவையானால் முஸ்லிம்களுக்கு மேலதிகமாக வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என்ற அடிப்படையிலும்,மக்கள் காங்கிரஸ் தலைமை சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்தை வரவேற்கலாம். என்றும் கூறலாம். ஆனால் இவ்விவகாரத்தில் இன்னுமொரு பக்கம் இருக்கின்றது. அதனையும் கவனிக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை

அதாவது, அதாவுல்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல இது வெறுமனே வீட்டுப் பங்கீட்டுப் பிரச்சினையல்ல. மாறாக, காணியுரிமை தொடர்பான பிரச்சினையுமாகும். இவ்வாறிருக்க,முஸ்லிம்களுக்கு பெயரளவிலேனும் இருக்கின்ற காணிக்குள் சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது உத்தியோகபூர்மாக நமது காணியில் சில பேர்ச்சஸ்களின் உரிமையை அவர்களுக்கு வழங்குவது போன்றது என்ற கருத்தை மறுதலிக்க முடியாது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்து வருகின்ற நிலையில் புனிதப் பிரதேசங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயர்களில் முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்கின்ற முயற்சி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, தீகவாபியை சுற்றியுள்ள காணிகளை தம்வசப்படுத்தும் திட்டம் அவர்களிடம் இருக்கின்றது. அண்மையில்,தீகவாபிக்கும் நுரைச்சோலைக்கும் இடையில் வாய்க்காலின் மேலாக புதிதாக போடப்பட்டுள்ள பாலமும் இதனடிப்படையிலான உத்தி என்றே தோன்றுகின்றது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இழந்திருக்கின்றனர். அதில் ஒரு ஏக்கர் காணியைத் தானும் இலேசாக மீட்டுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறிருக்கையில்,நுரைச்சோலையில் 97 வீடுகளை சிங்களவர்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் அங்கு வந்து வாழப்போவதில்லை என்றும்,கணிசமான வீடுகளை அவர்கள் முஸ்லிம்களுக்கு விற்பனை செய்வார்கள் என்றும் ஒரு சிலர் கருதலாம். ஆனால்,அம்பாறையில் சிங்கள விகிதாசாரத்தை அதிகரிப்பதற்காக வேறு இடங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து குடியேற்றியவர்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளைக் கூட வழங்க மனமில்லாமல் நீதிமன்றம் சென்றவர்கள், சிங்களவர்களுக்கு வழங்கப்படும் 97 வீடுகள் முஸ்லிம்களுக்கு உரித்தாக இடமளிப்பார்கள் என்று கருதுவது கடினமானதாகும்.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியிலும் அதாவுல்லா போன்றோரின் நிலைப்பாட்டிலும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கின்றன. குறிப்பாக றிசாட் ஒரு நல்ல எண்ணத்திலேயே இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்திருக்கின்றார் என்று கூறலாம். மறிச்சிக்கட்டிக்காக போராடும் அவர் நுரைச்சோலையை இனவாதத்திற்கு தாரைவார்க்க விரும்பமாட்டார் என்றே கருத முடிகின்றது. அதாவுல்லாவும் ஒரு நல்லெண்ண முயற்சியாகவே கடிதம் எழுதியிருக்கின்றார்.

ஆனால், இரண்டு விடயங்களில் அமைச்சர் றிசாட் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது இதனால் முஸ்லிம்கள் தமக்கிக்கிருக்கும் காணியில் ஒருதுண்டை இழப்பார்களா? என்ற கவலை தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். அதேபோல்,அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரையோ அல்லது அரசியல் ரீதியான பிரதிநிதித்துவத்தையோ நேரடியாக தனது கட்சியூடாக பெற்றிராத மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், உடனடியாக இவ்விடயம் குறித்து இங்குள்ள அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். இறுதியில்,இரண்டு நிலைப்பாட்டினை கொண்டவர்களும் உடனடியாக இது குறித்து கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
அதற்கப்பால், சொல்வதற்கு வேறொன்றுமில்லை!

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 23.04.2017)