முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீதான ஹஸன் அலியின் 3 பாரிய குற்றச்சாட்டுகள்!

பாலமுனையில் நேற்றிரவு (22) நடைபெற்ற ஹஸன் அலி- அன்சில் கலந்து கொண்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் மிகப் பாரதூரமானவையாக அமைந்திருந்தன. விசேடமாக, கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமான ஹஸன் அலி அவர்கள் அங்கு தெரிவித்த கருத்துகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த முக்கியஸ்தர்கள் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என நான் நம்புகிறேன்.

1. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து தான் அங்கிருந்து வெளியேறிய போது கட்சியின் தலைமை அலுவலகமான கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள தாருஸ்ஸலாமுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நான்கு ஆட்டோக்களில் காடையர்கள் அமர்ந்திருந்ததனை தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் அதன் போது தாக்கப்பட வேண்டிய நபர் நானே என்று அவர்கள் என்னை நினைத்து அந்தக் காடையர்களில் இருவர் பொல்லுகளுடன் தன்னை நோக்கி வந்ததாகவும் கூறியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் தனக்குப் பின்னால் வந்த இருவர் தன்னை எதிர்நோக்கி வந்தவர்களுடன் பேசியதனையடுத்து அவர்கள் சென்று விட்டனர் என்ற கருத்துப்பட ஹஸன் அலி கூறியிருந்தார்.

2. தான் கட்சியின் தலைவராக இருக்கும் வரை ஓர் அதிகார மையமே இருக்க வேண்டுமே தவிர இரண்டு அதிகார மையங்கள் (அதிகாரமுள்ள செயலாளர்) இருக்கக் கூடாது என அதே கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார் எனவும் ஹஸன் அலி கூறியிருந்தார்.

3. அம்பாறை மாவட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறும் நடவடிக்கைகளிலோ இறக்காமம் மாயக்கல்லிமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பிலோ ஹக்கீம் அலட்டிக் கொள்ளமாட்டார் என்றும் ஹஸன் அலி தெரிவித்திருந்தார். அதற்கு ஹஸன் அலி கூறிய காரணம், கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டியில் தேர்தலில் போட்டியிடுவதால் மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட்டால் கண்டியில் அவரது வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும்.

கண்டி மாவட்டத்தில் 80 சத வீதமான சிங்கள மக்களும் 20 சத வீதமான முஸ்லிம் மக்களும் ஹக்கீமை ஆதரித்தனர். இந்த 20 சத வீதத்தில் கூட 70 சத வீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள்தான். சுமார் 3,000பேர் வரைதான் முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்ற கருத்துப்படவும் ஹஸன் அலி கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேரடியாகச் சுட்டிக்காட்டியே ஹஸன் அலி முன்வைத்துள்ள இந்த மூன்று விடயங்களும் மிக பாரதூரமானவை.

இந்த விவகாரம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோ அல்லது அதிகாரமிக்க, தகுதிவாய்ந்த தரப்போ மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கட்டாய தேவை, பொறுப்பு உள்ளது என நான் ஆணித்தரமாக தெளிந்துள்ளேன்.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்